Breaking News

காஞ்சிபுரத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் கைது

புதிய நண்பர்களுடன் பெண்கள் எச்சரிக்கையுடன்  பழகுவது அவசியம் - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

காஞ்சிபுரம் :

பெண்கள் புதிய நண்பர்களுடன் பழகும்போது எச்சரிக்கையாக இருப்பதுடன், அவர்கள் என்ன உதவி செய்வதாக கூறினாலும் நம்பி யார் துணையும் இல்லாமல் அவர்களுடன் தனியாகச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர், மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா(19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் கடை ஒன்றில் பணி செய்து வருகிறார். அப்போது அந்தக் கடைக்கு அடிக்கடி வரும் பெரிய காஞ்சிபுரம் வணிகர் தெருவைச் சேர்ந்த குணசீலன்(23) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. 

இருவரும் தங்களது செல்போன் எண்ணை பறிமாறிக் கொண்டு அடிக்கடி பேசுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் அந்தப் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகவும், உதவிகள் செய்வதாகவும் குணசீலன் கூறுகிறார். இதனை நம்பி அந்தப் பெண்ணும் அவருடன் நெருங்கி பழகுகிறார்.

இந்தச் சூழ்நிலையில் அந்தப் பெண் பண உதவி கேட்க, குணசீலன் அந்தப் பெண்ணை பண உதவி செய்ய அலுவலகத்துக்கு அழைதுச் செல்வதாக கூறி மேல்கதிர்பூர் வயல் வெளி பகுதிக்கு காரில் அழைத்துச் செல்கிறார். அந்தப் பெண்ணுக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து குணசீலன் பாலியல் வன்கொடுமை செய்கிறார். 

இதனைத் தொடர்ந்து இவரது நண்பர்கள் சிறுவள்ளூர் மேட்டுக் காலனி பகுதியைச் சேர்ந்த ஜெபநேசன்(எ) சார்லஸ்(29), ஓரிக்கை குணசேகரன்(24), காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் மாடத் தெருவைச் சேர்ந்த அஜீத்குமார்(23) , பெரியகாஞ்சிபுரம் காமராஜ்(24) ஆகியோரும் காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்கின்றனர்.

ஒரு கட்டத்தில் பெண் வலி தாங்காமல் சத்தம்மிட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பெண்ணை மீட்டனர். 

இது தொடர்பாக பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்ததன் அடிப்படையில் குணசீலசன், ஜெபநேசன், சார்லஸ், குணசேகரன் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். 


காமராஜ் தப்பியோடிவிட அவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது மிரட்டுதல், கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை செய்தல் ஆகிய 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் கூறுகையில்

புதிய நண்பர்களுடன் பெண்கள் எச்சரிக்கையுடன் பழக வேண்டும். பழக்கம் இல்லாத நபர்கள் உதவி செய்வதாக கூறினாலும் அவர்களை நம்பி செல்லக் கூடாது. சமூக விரோதிகளும் உதவி செய்வதுபோல் நாடகமாடி பழக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

சம்பவம் கடந்த 1-ம் தேதி நடைபெற்றாலும் இந்தப் பெண் கடந்த 8-ம் தேதிதான் புகார் கொடுத்துள்ளார். இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்தால் பெண்கள் தைரியாக புகார் கொடுக்க வேண்டும். அவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும். மேலும் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யவும் முடியும் என்றார்.

இது குறித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் சௌந்தரி கூறுகையில்

கைது செய்யப்பட்டவர்களை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும். பெண்கள் பணி செய்யும் இடங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். அவர்கள் பணி செய்யும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த வேண்டும் என்றார்.

No comments

Thank you for your comments