நீட் தேர்வில் விலக்கு பெறும் சட்ட மசோதா தாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு
சென்னை :
தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறது எனக்கூறி சட்டமன்றத்திலிருந்து அதிமுக உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி வெளிநடப்பு செய்தார்.
மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
“நீட் தேர்வு தொடர்பாக இன்று பேரவையில் மசோதா கொண்டு வருகிறோம்; சட்டத்தை எதிர்க்கட்சியும் இணைந்து நிறைவேற்றித்தர வேண்டும். ” என்று கோரிக்கை வைத்தார்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது,
தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்கள் தேர்வுக்கு தயாராகாமல், தற்போது தேர்வு எழுத முடியாத அச்சத்தில் மாணவர் தனுஷ் உயிரிழந்துள்ளார்,' என குறிப்பிட்டார்.
இதையடுத்து அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில்,
'உச்சநீதிமன்றமும் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்து நீட் தேர்வில் இருந்து எப்படி விலக்கு பெற முடியும்?
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் மட்டுமே நீட்டுக்கு விலக்கு கேட்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற அதிமுக அரசு அனைத்து சட்டப்போராட்டங்களையும் நடத்தியது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை அதிமுக ஆதரவு அளிக்கும்.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையால் மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர். நீட் தேர்வு நடைபெறுமா ? நடைபெறாதா ? என்கிற குழப்பம் நீடித்து வந்தது.
நீட் தேர்வு ரத்தாகும் என்கிற நம்பிக்கையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகவில்லை. வாணியம்பாடியில் கஞ்சா குறித்து தகவல் தந்த மஜக நிர்வாகி கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்தவர்களை கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்,'என்றார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி.
மேலும், இதுகுறித்து அதிமுக ஐடி விங் டிவிட்டர் பதிவில்,
சேலம் மாணவர் தனுஷ் தற்கொலை மற்றும் வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் படுகொலையானது குறித்து அவையில் பேச விடாமல் மின்சாரத்தை துண்டித்ததைக் கண்டித்து மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.#NEET #TNAssembly #AIADMK pic.twitter.com/BbwQrviCw8
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) September 13, 2021
No comments
Thank you for your comments