ஆக்கிரமித்து கட்டிய வீடுகளுக்கு மின் இணைப்பு குடிநீர் விநியோகம் அடியோடு நிறுத்தி அதிரடி! - ஆணையர் சங்கரனுக்கு குவியும் பாராட்டு...
வேலூர், செப்.17-
வேலூர் வள்ளலார் பகுதியில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் விநியோகத்தை அதிகாரிகள் அதிரடியாக துண்டித்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சி முழுவதும் மாநகராட்சி, வருவாய், வனத்துறைக்குச் சொந்தமான இடங்களை பொதுமக்கள் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டியுள்ளனர். இது குறித்து ஆய்வு செய்ய மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார். அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட ஆய்வில் வள்ளலார் ஐயப்பன் கோவில் மலையடிவாரத்தை ஆக்கிரமித்து 75 கட்டடங்கள், வீடுகள் கட்டப்பட்டுள்ளதும், நிறைய இடங்களில் கட்டுமானப் பணிகள் நடந்து வருவதும் தெரியவந்தது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட 5 வீடுகளின் சுவற்றை ஜே.சி.பி., மூலம் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் (செப்.,15) இடித்துத் தள்ளினர். மற்ற வீட்டு உரிமையாளர்களுக்கு 15 நாளில் ஆக்கிரமிப்பை அகற்றும்படி நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடு, கடைகளுக்கு மின், குடிநீர் இணைப்பு உள்ளது. அவர்கள் சத்துவாச்சாரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். இதனால் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை, வீடுகளுக்கு எப்படி மின், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. சொத்து வரியை எப்படி வாங்கினர் என அதிகாரிகள் குழம்பி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வேலூர் சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் தொடங்கி காகிதப்பட்டரை, சத்துவாச்சாரி, வள்ளலார், செங்காநத்தம், பெருமுகை, நாமக்கார மலைகள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், கடைகள் தன்னிச்சையாக கட்டியுள்ளனர்.
அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு முறைகேடாக மின், குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளனர். ஆக்கிரமிப்பு இடத்துக்கு சொத்து வரியை நிர்ணயித்து வசூலித்து வந்துள்ளனர். இதனால் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களுக்கு மின், குடிநீர் இணைப்பு வழங்கியவர்கள், சொத்து வரி நிர்ணயித்த மாநகராட்சி, மின் வாரிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில் முதல் கட்டமாக வள்ளலார் ஐயப்பன் கோயில் பகுதியில் ஆக்கிரமித்து கட்டிய 10 வீடுகளுக்கு மின், குடிநீர் விநியோத்தை அதிகாரிகள் நேற்று அதிரடியாக துண்டித்தனர். இதனால் அந்தப்பகுதி வாழ் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். இதுபோன்ற ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கையூட்டு பெற்றுக் கொண்டு அப்போதிருந்த மாநகராட்சி அதிகாரிகள் வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளனர். இதைப் பார்த்த மின் வாரியமும் மின் இணைப்பு வழங்கியுள்ளது.
பத்திர நகல் கேட்டு பெற்றுக் கொண்டு வரி நிர்ணயம் செய்யும் மாநகராட்சி நிர்வாகம் எந்த அடிப்படையில் வரிவிதித்தது என்று தெரியவில்லை. அத்துடன் லஞ்சம் கொடுத்தால் கண்களை மூடிக் கொண்டு கையொப்பம் இடும் அதிகாரிகள் மாநகராட்சியில் பணியில் இருந்துள்ளனர் என்பதற்கு இது ஒன்றே சரியான உதாரணமாகும். இப்படி கொள்ளையடித்த பணத்தில்தான் மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் கோடிக்கணக்கில் சொகுசு பங்களாக்களை கட்டியுள்ளனர் என்பது நன்கு புலப்படுகிறது.
மக்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு கையொப்பம் போட்டு கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை சிறையில் அடைக்கும் பணியை தற்போதுள்ள மாநகராட்சி ஆணையர் சங்கரன் செய்ய வேண்டும் என்பதே பல சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாநகராட்சி ஆணையர் சங்கரனின் அதிரடி நடவடிக்கைகளை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தங்களது பாரட்டுகளை வாழ்த்துக் களையும் தெரிவித்து வருகின்றனர்.
மாநகராட்சி ஆணையர் இதில் இன்னமும் தோண்டி துருவினால் பல உண்மைகள் வெட்ட வெளிச்சத்துக்கு வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மாநகராட்சியின் சிதம்பர ரகசியம் வெளியில் கசிய ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியுள்ளது.

No comments
Thank you for your comments