முக்கிய மாவட்டச் செய்திகள் தொகுப்பு...
தாய் - 2 மகன்கள் மாயம்!
வேலூர், செப்.17-
குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்த பெண், தனது இரண்டு மகன்களுடன் மாயமானார். போலீஸார் இவர்கள் 3 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
விருதம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வஞ்சூர் பிடபள்யூடி நகரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி ராஜலஷ்மி @அமுலு மற்றும் இரண்டு மகன்கள் ஹேமச்சந்திரன்(11), விக்னேஷ்வரன்(9) ஆகியோர் கடந்த 16.08.2021ம் தேதி முதல் காணவில்லை. எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லையாம். குடும்பத்தகராறு தொடர்பாக தனது மகன்களை அழைத்துக் கொண்டு சென்ற ராஜலக்ஷ்மியை தேடிப் பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இவர்களை பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால் 8903305130 என்ற செல்போன் நெம்பருக்கு தகவல் தெரிவிக்கவும் என்று விருதம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மனோகர் தெரிவித்துள்ளார்.
******************
காட்பாடி பகுதியில் வேட்பு மனு தாக்கல்!
வேலூர், செப்.17-
காட்பாடி தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டி போட்டுக் கொண்டு பலர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பரமசாத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக வெண்ணிலா பிரபாகரன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். காட்பாடி 55 புதூர் லட்சுமிபுரம் தலைவர் பதவிக்கு ஜி.சண்முகம் திமுக சார்பில் வேட்பு மனு செய்துள்ளார். காட்பாடி மெட்டுகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சையாக விமல் பாரதி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதேபோன்று காட்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பொன்னை என்.பி.என். பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சி.ரமேஷ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். காட்பாடி வன்டறந்தாங்கல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ராகேஷ் அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர்கள் அனைவரும் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று காலை முதல் ஒருவர் பின் ஒருவராக வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
******************
காட்பாடி தாலுகாவில் 23 விஏஓக்கள் பணியிடமாற்றம்!
வேலூர், செப்.17-
காட்பாடி தாலுகாவில் பணியாற்றும் விஏஓக்கள் 23 பேரை பணியிடமாற்றம் செய்து வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செ.விஷ்ணுபிரியா உத்தரவிட்டுள்ளார்.
காட்பாடி தாலுகாவில் பணியாற்றும் சில விஏஓக்கள் மீது பொதுமக்கள் பலவிதமான புகார்களை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோருக்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் 4 விஏஓக்களை பணியிடமாற்றம் செய்தார். இதற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செ.விஷ்ணுபிரியா கடந்த 13ம் தேதி கட்பாடி வட்டத்தில் உள்ள 23 விஏஓக்களை வரவழைத்து பணிமாறுதல் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தை நடத்தினார். இதையடுத்து அந்த கலந்தாய்வில் மேற்கொண்ட முடிவின் படி காங்கேயநல்லூர் நிவேதா குமாரி கரசமங்கலத்துக்கும், பவிதா கரசமங்கலத்தில் இருந்து காங்கேயநல்லூருக்கும், சுகுமார் வள்ளிமலையில் இருந்து காட்பாடிக்கும், நந்தகுமார் கொடுக்கந்தாங்கலில் இருந்து கழிஞ்சூருக்கும், கமலக்கண்ணன் அம்மவாரிபள்ளியில் இருந்து தாராபடவேடுக்கும், கோமதி மாதாண்டகுப்பம் மற்றும் பரசாத்தில் இருந்து திருவலத்துக்கும், அன்பரசன் வண்டறந்தாங்கிலில் இருந்து செம்பராயநல்லூருக்கும், வடிவேல் கழிஞ்சூரில் இருந்து வள்ளிமலைக்கும், அருண்குமார் காட்பாடியில் இருந்து தலையாரம்பட்டு, உண்ணாமுலைசமுத்திரத்துக்கும், கோபிநாதன் தாராபடவேட்டில் இருந்து முத்தரசிக்குப்பத்துக்கும், ஜோதீஸ்வரன் திருவலத்தில் இருந்து இளையநல்லூருக்கும், குணராஜன் விண்ணம்பள்ளியில் இருந்து மேல்பாடிக்கும், ஷீலா வஞ்சூரில் இருந்து மகிமண்டலத்துக்கும், திலிப்குமார் சேனூரில் இருந்து அம்முண்டி ஆரிமுத்துமோட்டூர், குப்பத்தாமோட்டூருக்கும், பிரியதர்ஷினி மேல்பாடியில் இருந்து வெப்பாலைக்கும், விஜயா முத்தரசிக்குப்பத்தில் இருந்து விண்ணம்பள்ளிக்கும், பரத் தெங்காலில் இருந்து மாதாண்டகுப்பம் மற்றும் பரமசாத்துக்கும், விநாயகம் அம்முண்டி ஆரிமுத்து மோட்டூர், குப்பத்தாமோட்டூரில் இருந்து வண்டறந்தாங்கலுக்கும், மேகலா செம்பராயநல்லூரில் இருந்து சேனூருக்கும், அருண் மகிமண்டபத்தில் இருந்து தெங்காலுக்கும், வெங்கடேசன் தலையாரம்பட்டு உண்ணாமுலைசமுத்திரத்தில் இருந்து வஞ்சூருக்கும், சரண்யா இளையநல்லூரில் இருந்து கொடுக்கந்தாங்கலுக்கும், சின்னசாமி வெப்பாலையில் இருந்து எருக்கம்பட்டு பெருமாள்குப்பத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 23 பேரும் வரும் திங்களன்று புதிய பணியிடங்களில் பொறுப்பேற்க உள்ளனர். இந்த இடமாற்றத்துக்கான உத்தரவை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா பிறப்பித்துள்ளார். இந்த அதிரடி இடமாற்ற உத்தரவால் விஏஓக்கள் கதிகலங்கி போய் உள்ளனர்.
******************
கவனமாக மனு தாக்கல் செய்யுங்கள்-சி.வி.சண்முகம்
விழுப்புரம், செப்.17-
தி.மு.க., ஆட்சியில் நியாயம், தர்மத்தை எதிர்பார்க்க முடியாது என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தேர்தல் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட துணைச் செயலாளர் சக்கரபாணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் மணியன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், அணி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் சின்னம் தவறாக இருந்தால் கூட தேர்தல் அதிகாரிகள் அதையே சுட்டிக் காட்டி நிராகரித்து விடுவர். தி.மு.க., ஆட்சியில் நியாயம், தர்மத்தை எதிர்பார்க்க முடியாது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் சான்றுகளை சரிபார்த்து வழங்க வேண்டும். இல்லையெனில், நிராகரித்து நாம் நீதிமன்றம் சென்று வருவதற்குள் பணி காலமே முடிவடைந்து விடும். தி.மு.க.,வை ஏன் ஆட்சியில் உட்கார வைத்தோம் என நினைத்து மக்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களே தற்போது நினைக்கின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சி சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள். தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க., வெல்வது உறுதி. இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
******************
சாலையை கடந்து செல்லும்
ஒற்றை யானையால் மக்கள் பீதி!
வேலூர், செப்.17-
குடியாத்தம் அருகே சாலையை கடந்து ஒற்றை யானை சென்று வருவதால் மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை கடந்த சில நாட்களாக வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே மோர்தானா, லத்தேரி, சைனகுண்டா பகுதியில் சுற்றிக் கொண்டு பயிர்களை நாசம் செய்து வருகிறது. யானையை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில், சைனகுண்டா சோதனை சாவடி அருகே உள்ள சாலையை நேற்று காலை 8:00 மணிக்கு யானை கடந்து ஊருக்குள் சென்றது.
பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் புகுந்தது. அடிக்கடி இது போல யானை சென்று வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் பீதியில் உறைந்து போய் உள்ளனர். இது குறித்து வனத்துறையினரை கேட்டதற்கு, கும்கி யானையைக் கொண்டு ஒற்றை யானையைப் பிடிக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறினர்.


No comments
Thank you for your comments