கண்டமங்கலம் அரசு பள்ளி ஆய்வகத்தில் பயங்கரம்! - வலுக்கும் எதிர்ப்பு
விழுப்புரம், செப்.14-
கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆய்வகத்தில் உள்ள பொருட்களை இடம் மாற்றும்போது ஆசிட் குடுவை உடைந்து 4 மாணவிகள் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை பணிக்காக விழுப்புரம் ஜானகிபுரம் ரயில்வே கேட்டில் இருந்து நவமால்காப்பேர் வரை சாலை விரிவாக்கப் பணி நடக்கிறது. இதற்காக விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் சாலையின் இருபுறமும் உள்ள கட்டடங்கள் இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இச்சாலையில் உள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஒரு பகுதியான வகுப்பறை, வேதியியல் ஆய்வகம், கம்ப்யூட்டர் அறை, கலையரங்கம் உள்ளிட்ட கட்டங்கள் இடிக்கப்பட உள்ளன. இதற்காக, கட்டடத்தில் உள்ள வாயில் மற்றும் ஜன்னல் கதவுகளை தொழிலாளர்கள் பெயர்த்து அகற்றும் பணி நடக்கிறது.
நேற்று காலை 9:00 மணியளவில் பள்ளிக்கு வந்த பிளஸ் 2 மாணவிகளான பள்ளிப்புதுப்பட்டு முருகன் மகள் பாமா(17), மிட்டாமண்டகப்பட்டு சக்தி முருகன் மகள் ஆதிஷா(17), சாம்பசிவம் மகள் ஜனனி(17), ராஜி மகள் நித்யா(17) ஆகியோர் வேதியியல் ஆய்வகத்தில் இருந்து பொருட்களை வேறு கட்டடத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த அறையில் வாயிற்கதவு உடைக்கப்பட்ட பகுதியில் இருந்து கான்கிரீட், அருகில் உள்ள சிலாப் மீது வைக்கப்பட்டிருந்த 'சல்பியூரிக் ஆசிட்' குடுவை மீது விழுந்தது. ஆசிட் குடுவையில் இருந்த ஆசிட் 4 மாணவிகள் மீதும் தெறித்தது.
பாமா முகத்திலும், மற்ற மாணவிகளுக்கு கை, கால் மற்றும் முதுகு, கழுத்து பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. உடன் பள்ளி தலைமையாசிரியர் ராஜாராம் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளை அருகில் உள்ள அரியூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
விழுப்புரம் கலெக்டர் மோகன், தாசில்தார் வெங்கடசுப்ரமணியன், சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா, டி.இ.ஓ., கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்த்தி, ஆர்.ஐ., இளவரசி, வி.ஏ.ஓ., ஜனார்த்தனன், கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ் ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பாதிக்கப்பட்ட 4 பேரில் மாணவி பாமாவுக்கு வலது கண் பாதிக்கப்பட்டதுடன், முகம் முழுதும் தீக்காயங்களால் அலறித்துடித்தார்.
கலெக்டர் உத்தரவின் பேரில் மாணவி பாமாவை மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் முயன்றனர். அதற்கு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பாமா சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம் தடயவியல் நிபுணர் ராஜீவ் அறிவியல் ஆய்வகத்தில் குடுவை உடைந்து தரையில் சிதறிய ஆசிட் மாதிரியை ஆய்வுக்கு சேகரித்தார்.
உரிய பாதுகாப்பு இன்றி ஆபத்தான உபகரணங்களை இடமாற்றம் செய்ய மாணவியரை பயன்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாராமை சஸ்பெண்ட் செய்து சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா உத்தரவிட்டார்.
இச்சம்பவம் குறித்து மாணவி பாமாவின் தாய் சித்ரா அளித்த புகாரின் பேரில்,
பள்ளி தலைமையாசிரியர் ராஜாராம் மீது வழக்குப் பதிந்து டி.எஸ்.பி., பழனிசாமி, கண்டமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
இதுபோன்ற அலட்சியம் காண்பித்ததால் மாணவி இன்று தனது அழகை, கண்களை பறிகொடுத்து உயிருக்கு போராடி வருகிறார். இதுபோன்றவர்களை சஸ்பெண்ட் செய்வதை தவிர்த்து நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
கல்வித்துறை அமைச்சர் என்ன நடவடிக்கை மேற்கொள்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments
Thank you for your comments