Breaking News

தனியார் பைனான்ஸியர் கொடுமையால் மாற்றுத்திறனாளி விவசாயி தற்கொலை...!

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே தனியார் பைனான்ஸில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தகோரி ஊழியர்கள் நெருக்கடி தந்ததால் மாற்றுத்திறனாளி விவசாயி பைனான்ஸ் நிறுவனத்தின் வாசலில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் இவர் மாற்று திறனாளி ஆவார். விவசாயம் பார்த்து வரும் இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்நிலையில் விவசாயம் செய்வதற்காக,  2019 ஆம் ஆண்டு TVS Credit Service என்னும் தனியார் நிறுவனத்தில் ரூ.2,11,734/- கடன் பெற்றுள்ளார். அவர் மாற்றுத் திறனாளி என்பதால் அவருடைய ஜாமினில்  ராமகிருஷ்ணன் என்பவரது பெயருக்கு கடன் பெறப்பட்டுள்ளது. அந்த கடன் தொகையில் ரூ.1,68,354/-த்தை மனோகரன் என்பவர் திருப்பி செலுத்தி உள்ளார்.  மீதி கடன் தொகை ரூ. 43,380/- நிலுவையில் உள்ளது. 

இதை வசூல் செய்ய நிறுவனத்தின் ஆட்கள் மனோகரன் வீட்டிற்கும், ராமகிருஷ்ணன் வீட்டிற்கும் சென்று மிரட்டி உள்ளனர். பதில் சொல்ல இயலாமல் நிறுவனத்திற்கு மனோகரனே நேரில் சென்று அவகாசம் தர கெருஞ்சியுள்ளார். 

இந்நிலையில், வீட்டில் உள்ளவர்களை மிரட்டியதால் காவல் நிலையத்திற்கும் சென்று புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. ஆனால் விசாரணை ஏதும் செய்யாததால் மீண்டும் நிறுவனத்திற்குச்சென்று அவகாசம் தரக் கோரியுள்ளார்.

இந்நிலையில், அவர் மனைவிக்கும், அவரது ஒரு வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடன் தவணைகளை செலுத்த முடியாமல் போனது. இந்நிலையில் மூன்று மாத காலமாக தவணைத் தொகை செலுத்தாத நிலையில் கடனை செலுத்தகோரி தனியார் பைனான்ஸ் ஊழியர்கள் நேரிலும், தொலைபேசியிலும் அடிக்கடி நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது. 

இதனையடுத்து, கடனை திருப்பி செலுத்தக் கோரி மனோகரனை அவர் வீட்டு வாசலில் வைத்து ஊழியர்கள் கிராம மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்து வேதனையுடன் இருந்த விவசாயி மனோகரன் பைனான்ஸ் நிறுவன வாசலில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதையடுத்து காஞ்சிபுரம் அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மனோகரன் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சூழலில் விவசாயி மனோகரன் உயிரிழப்புக்கு காரணமான தனியார் பைனான்ஸ் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக மனோகரின் உறவினர்கள் வாலாஜாபாத் காவல்நிலையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் பைனான்ஸ் ஊழியர்கள் அமர்நாத், கிருஷ்ணா, சரத்குமார், கார்த்திக் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து வாலாஜாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

No comments

Thank you for your comments