செல்லாத ரூபாய் நோட்டுகள் மாற்றம்...சிக்கலில் மாஜிக்கள்..?
சென்னை:
டாஸ்மாக் மதுபான கடைகளில் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக கூறப்படும் முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோரது பெயர்கள் அடிபடுவதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று இரவு, ரூ500, ரூ1,000 நோட்டுகள் இனி செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென அறிவித்தார்.
இதனையடுத்து செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் பொதுமக்கள் வரிசைகட்டி நிற்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. அப்போது வங்கி கணக்கில் பணம் எடுக்க ஏ.டி.எம்.மையங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் சொந்த வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் பல மணிநேரம் வரிசையில் நின்று பொதுமக்கள் காத்திருந்து பெரும் அவதிக்குள்ளாகினர்.
நாட்டில் அப்போது அசாதாரண நிலை போன்ற சூழல் நிலவியது. பின்னர் புதியதாக ரூ2,000, ரூ500, ரூ100 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட காலத்தில் அவற்றை வாங்க வேண்டாம் என தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை மீறியும் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் புதிய ரூபாய் நோட்டுகளை டாஸ்மாக் மதுபான கடைகள் மூலமாக மாற்றியதாக ஒரு சர்ச்சை எழுந்தது.
சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.62 கோடிக்கு செல்லாத ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டதாக தகவல்களைப் பெற்றுள்ளனர். இது தொடர்பாக வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடமும் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இத்தகைய சட்டவிரோத பணப் பரிமாற்றம் திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் நடைபெற்றதும் தெரியவந்தது.
இது தொடர்பான விசாரணையை வருமான வரித்துறை தூசு தட்டி உள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்திடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டிருந்தது வருமான வரித்துறை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதித்துவிடக் கூடாது என்பதற்காக செல்லாத ரூபாய் நோட்டுகளைப் பெற்றதாக டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அப்போது மதுவிலக்கு ஆயத் தீர்வை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அத்துடன் திண்டுக்கல், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன், எம்.சி.சம்பத் ஆகியோர் அமைச்சர்களாகவும் இருந்தனர். இந்த மூவருக்கும் தெரியாமல் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ய வாய்ப்பில்லை என்கின்றன வருமான வரித்துறை வட்டாரங்கள். இதுதான் இப்போது கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதலே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் என பலரது மீதான வழக்குகளில் சோதனைகளும் விசாரணைகளும் சூடுபிடித்துள்ளன.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களா கொலை, கொள்ளை வழக்கில் மாஜி முதல்வ்ர் எடப்பாடி பழனிசாமி சிக்குவார் எனவும் கூறப்படுகிறது.
அதேபோன்று, சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு தரமற்ற வகையில் கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரில், கடந்த ஆட்சியில் குடிசை மாற்று வாரியத்தை கவனித்த ஓபிஎஸ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திமுக எம்எல்ஏ பரந்தாமன் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
குட்கா லஞ்ச ஊழல் வழக்கில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், ரமண சிக்கியுள்ளனர். தமிழக மின்சார வாரிய அனல்மின் நிலையங்களில் நிலக்கரி மாயமான விவகாரத்திலும் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.
இந்த வரிசையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கில் கொத்தாக மாஜி அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எம்.சி.சம்பத் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன. இந்த வழக்கையும் லஞ்ச ஒழிப்புத்துறை கையில் எடுக்கப் போகிறதாம். இதனால் அதிமுக மாஜி அமைச்சர்கள் பலரும் கலக்கத்தில் இருக்கின்றனராம்.
ஆக மொத்தம் அதிமுக முன்னாள் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என மாஜிக்கள் சிக்கலில் உள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகிறது... அனைத்தும் காலங்கள் செய்யும் கோலங்கள்... பொறுதிருந்து பார்ப்போம் காலச்சக்கரம் சுழற்சியில்...

No comments
Thank you for your comments