Breaking News

நாக நதியை மீட்டெடுத்த தமிழக பெண்கள்- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டு

புதுடெல்லி:

இன்று உலக ஆறுகள் தினம் (செப்டம்பர் 26) குறித்தும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

தமிழக சகோதர, சகோதரிகளின் முயற்சியைப் போன்று இந்தியா முழுவதும் பல்வேறு நதிகளை மீட்டெடுக்க பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அவ்வகையில் 81-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். 

உலக ஆறுகள் தினம் இன்று கடைபிடிப்பது (செப்டம்பர் 26) குறித்து பிரதமர் பேசினார்.

செப்டம்பர் ஒரு முக்கியமான மாதம், நாம் உலக நதி தினத்தை கொண்டாடக்கூடிய ஒரு மாதம். சுயநலமின்றி நமக்கு தண்ணீர் வழங்கும் நதிகளின் பங்களிப்பை நினைவுகூரும் நாள்.  பல்வேறு நாட்கள் கொண்டாடப்பட்டாலும் நாம் மிக முக்கியமாக கொண்டாட வேண்டிய தினம் உலக நதி தினம். 

மேற்கு இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீர் பற்றாக்குறை உள்ளது.

கூட்டு முயற்சியின் மூலம் நமது ஆறுகளை மாசு இல்லாததாக மாற்ற முடியும். கங்கையை போற்றுவோம் திட்டம் இன்று வெற்றிகரமான திட்டமாக திகழ்கிறது.

நம் நாட்டில் உள்ள ஆறுகளுடன் தொடர்புடைய பாரம்பரியங்களை இணைக்க ஆண்டுதோறும் உலக ஆறுகள் தினத்தன்று 'நதி விழாவை' கொண்டாட பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அப்போது  தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாகநதி குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி,

‘திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் 'நாக நதி' சில ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனது.  இதன் காரணமாக இந்த நிலப்பரப்பில் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது. 

ஆனால், இங்கே இருக்கும் பெண்கள் இந்தச் சவாலை சிரமேற்கொண்டு, தங்களுடைய இந்த நதிக்கு மீளுயிர்ப்பளித்தார்கள்.  இவர்கள் மக்களை இணைத்தார்கள், மக்கள் பங்களிப்பு வாயிலாக கால்வாய்களைத் தோண்டினார்கள், தடுப்பணைகளை உருவாக்கினார்கள், மறுசெறிவுக் குளங்களை வெட்டினார்கள்.  

நாக நதியை மீட்டெடுக்க அப்பகுதி பெண்கள் மேற்கொண்ட முயற்சியால் இன்று நதியில் தண்ணீர் நிரம்பியுள்ளது என்பதை அறிந்து உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.  நதியில் நீர் நிரம்பி இருக்கும் காட்சி மனதிற்கு ஒரு அமைதியை ஏற்படுத்துகிறது, இதை நானே கூட அனுபவித்திருக்கிறேன்.

தமிழக சகோதர, சகோதரிகளின் முயற்சியைப் போன்று இந்தியா முழுவதும் பல்வேறு நதிகளை மீட்டெடுக்க பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்’ என்றார் பிரதமர் மோடி.

திருவண்ணாமலையின் நாகநதி, ஜவ்வாது மலையில் உருவாகி ஆரணி வழியாக வாழைப்பந்தல் எனும் இடத்தில் செய்யாற்றில் கலக்கிறது. இந்த ஆறு ஆரணி தாலுகா மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

மருத்துவத் தாவரங்கள்

நண்பர்களே, வரவிருக்கும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று லால் பஹாதுர் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாளுமாகும்.  அவரது நினைவைப் போற்றும் வகையிலே இந்த நாள் விவசாயத்தில் புதியபுதிய பரிசோதனைகளைச் செய்பவர்களுக்கும் கற்றலை அளிக்கிறது.  

மருத்துவத் தாவரங்கள் துறையில் ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கமளிக்கும் Medi-Hub TBI என்ற பெயர் கொண்ட ஒரு இன்குபேட்டர், குஜராத்தின் ஆனந்தில் இதற்கான பணிகள் நடந்தேறி வருகின்றன.  மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்களோடு தொடர்புடைய இன்குபேட்டர், மிகக்குறைவான காலத்திலேயே 15 தொழில்முனைவோரின் வியாபார முனைப்பிற்கு ஆதரவளித்திருக்கிறது.  

இந்த இன்குபேட்டரின் துணைக்கொண்டு, சுதா சேப்ரோலூ அவர்கள் தன்னுடைய ஸ்டார்ட் அப்பைத் தொடங்கி இருக்கிறார்.  இவரது நிறுவனத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, நூதனமான மருத்துவ வடிவமைத்தல்களின் பொறுப்பு இவர்களிடமே உள்ளது.  மேலும் ஒரு தொழில் முனைவோரான சுபாஸ்ரீ அவர்களுக்கும் இதே மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்களின் இன்குபேட்டரிடமிருந்து உதவிகள் கிடைத்துள்ளன.  சுபாஸ்ரீ அவர்களின் நிறுவனம், மருத்துவத் தாவர அறை மற்றும் காரின் காற்றினிமைத் திவலைத் துறையில் பணியாற்றி வருகிறது.  இவர் ஒரு மருத்துவத் தாவர மாடித் தோட்டத்தையும் ஏற்படுத்தி, அதிலே 400க்கும் மேற்பட்ட மருத்துவத் தாவரங்களைப் பயிர் செய்து வருகிறார்.

நண்பர்களே, குழந்தைகளிடத்திலே மருத்துவத் தாவரங்கள் மற்றும் மூலிகைத் தாவரங்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகம் ஒரு சுவாரசியமான முன்னெடுப்பைச் செய்திருக்கிறது, இந்தச் சவாலை ஏற்றிருக்கிறார் நமது பேராசிரியர் ஆயுஷ்மான் அவர்கள்.  சரி, யார் இந்த பேராசிரியர் ஆயுஷ்மான் என்று நீங்கள் யோசிக்கலாம்?  உள்ளபடியே, பேராசிரியர் ஆயுஷ்மான் என்பவர் ஒரு காமிக் புத்தகத்தின் கதாபாத்திரம்.  இதிலே பலவகையான கேலிச்சித்திரங்கள் வாயிலாக, சின்னச்சின்னக் கதைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.  இதோடு கூடவே, கற்றாழை, துளசி, நெல்லி, வேம்பு, சீந்தில், அஸ்வகந்தா, வல்லாரை போன்ற ஆரோக்கியத்திற்கு உதவும் மருத்துவத் தாவரங்களின் பயன்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

நண்பர்களே, இன்றைய நிலையில், எந்த வகையான மருத்துவத் தாவரம் மற்றும் மூலிகைப் பொருட்கள் உற்பத்தி குறித்து உலகம் முழுவதிலும் ஆர்வம் அதிகரித்திருக்கிறதோ, அவை தொடர்பாக பாரத நாட்டிடம் அளப்பரிய சாத்தியக்கூறுகள் உள்ளன.  கடந்த காலத்திலே ஆயுர்வேத மற்றும் மூலிகைப் பொருட்கள் ஏற்றுமதியில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.

மக்களின் உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கக்கூடிய, நமது விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வருவாயை அதிகரிப்பதில் உதவிகரமாக இருக்கும் இப்படிப்பட்ட பொருட்கள் மீது நீங்கள் உங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப்கள் உலகோடு தொடர்புடையவர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். 

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போரில் தடுப்பூசி செலுத்துவதில் தினம் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது. நமது முறை வரும் போது நாம் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்

யாருக்காவது தடுப்பூசி போட வில்லை எனில் அவர்களையும் அழைத்துச்சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும். வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் கொரோனா போராட்டத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தப் போரிலே, மீண்டும் ஒருமுறை டீம் இண்டியா தனது முத்திரையைப் பதிக்கும் என்பதிலே எனக்கு எந்தவிதமான ஐயமும் கிடையாது.  நாம் அடுத்த முறை மேலும் பல விஷயங்கள் குறித்து மனதின் குரலில் உரையாடுவோம்.  உங்கள் அனைவருக்கும், நாட்டுமக்கள் அனைவருக்கும், பண்டிகைகளுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.  நன்றி.  இவ்வாறு உரையாற்றினார்.

No comments

Thank you for your comments