Breaking News

எதை எண்ணி வருந்துவது? - ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கமல்ஹாசன் பரபரப்பு அறிக்கை!

சென்னை: 

கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்து வருவதாகவும், அரசு இதனை வேடிக்கை பார்ப்பதாகவும்... எதை எண்ணி வருந்துவது? - ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை..  என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பி பரபரப்பு அறிக்கை ஒன்றை இன்று (09/09/2021) வெளியிட்டுள்ளார்.

எண்ண எண்ண பெருகும் வருத்தம் என்ற தலைப்பில் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில்

கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்துவருவதை  நாளிதழ்  செய்தி அம்பலப்படுத்தியுள்ளது.

ஐம்பதாண்டுகளாகத் தமிழகத்தில் நிகழ்வதுதானே, இதில் என்ன ஆச்சர்யம்? இந்த மணல் கொள்ளை நடப்பது தலைமைச் செயலகத்திலிருந்து சுமார் 1 கிமீ தொலைவில். நாற்புறமும் அரசு அலுவலங்கள் உள்ள பகுதியில். ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சாலையின் வழியாக லாரி லாரியாக மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது. பொதுப்பணித்துறை சிறப்பான முறையில் வேடிக்கை பார்த்துள்ளது. 

மிக மிக குறைந்தபட்ச மதிப்பு வைத்து கணக்கிட்டாலும் நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மணல் ஏப்பம் விடப்பட்டுள்ளது. வருடத்திற்கு சுமார் 11 கோடி ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பு.

இவையெல்லாவற்றையும் விட பெரும்கொடுமை என்னவென்றால், இந்த மணல் கட்டுமானத்திற்கு உகந்தது அல்ல. இம்மணலைக் கொண்டு கட்டடம் கட்டினால் நிச்சயம் இடிந்து விழுந்துவிடும் என்கிறார்கள் கட்டுமான நிபுணர்கள். அப்படியெனில், இந்த மணலை அள்ளி கட்டிடங்கள் கட்டிய மகானுபாவர்கள் யார்? அவற்றைப் பயன்படுத்தப் போவது யார்? அதில் வாழப் போகிற மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு? 

கூவம் கடலுடன் இணையும் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் சூழியல் மிக மோசமாக அழிந்துவருகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறார்கள்.

அனுமதி இல்லாமல் திருடுகிறார்களே என்று வருந்துவதா? 

அரசுக்கு வருவாய் இழப்பு என்று வருந்துவதா? 

அரசு இயந்திரம் உறங்கிக்கொண்டிருக்கிறதே என்று வருந்துவதா? 

ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடர்கிறதே என வருந்துவதா? 

சூழியல் சீரழிகிறதே என்று வருந்துவதா? 

இந்த மண்ணில் கட்டப்படும் கட்டிடங்களால் ஏற்படப் போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா? 

இவ்வாறு கமல்ஹாசன் அடுக்கடுக்கான கேள்விகளுடன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

நெட்டீசன்கள் கருத்துரை.. விமர்சனம்...

காலங்கள் மாறினும் காட்சிகள் மாறவில்லை. ஆட்சிகள் மாறினும் அவலங்கள் தீரவில்லை. ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் இதை கண்காணிக்க ஆளில்லை. இருசக்கர வாகன ஒட்டிகளை நிறுத்தி ஆவணங்கள் கேட்கும் காவலர்கள், லாரிகளை கண்டுகொள்ள நேரமில்லை.கேபிபார்க் கட்டிடம் இந்த மணலில்தான் கட்டியிருப்பார்களோ! 

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை இது காலம்காலமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதன் பக்க விளைவுகளை மிக அழகாக தெளிவுபடுத்தியுள்ளார். கண்கள் திறந்தது இருந்தும் இதை கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகளை என்னவென்று சொல்வது.. சிந்திப்பீர் மக்களே ! பாதிப்பு நமக்குத்தான்.

ப்ரோ, இங்க இந்தியாவே விற்பனைக்கு என்று போர்ட் போட்டாச்சி இதுல தமிழ்நாடு என்று பிரிக்காதீர்

Will DMK answer this?. ADMK raises this question?... never... both are doing the same mistake, so both will support each other..

நம்மால் இதை எண்ணி வருந்த தான் முடியும்..

பொது சொத்தை கொள்ளை அடிக்கும் போது மக்கள் கேள்வி கேட்டால் தான் இதெல்லாம் தடுக்க முடியும்.  அது போன்ற வின்சன்ட் பூவராகன்கள் திரையில் மட்டும் தான் இருக்கிறார்கள், நிஜத்தில் இல்லை.  

இவ்வாறு, சமூக வலைதளத்தில் ரீ டிவிட்டில் கருத்துரை.. விமர்சனம்...  செய்து வருகின்றனர் நம்ம நெட்டீசன்கள்..



No comments

Thank you for your comments