தொடர்ந்து உருமாறும் கொரோனா... புதிய வேக்சின்கள் தேவை... எச்சரிக்கை
ஜெனிவா:
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருந்தால் அது ஒரு கட்டத்தில் வேக்சினில் இருந்து தப்ப வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதேபோல இப்போதுள்ள வேக்சின்கள் கொரோனா பரவலைத் தடுப்பதில்லை என்பதால் புதிய வேக்சினை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உலகில் கடந்த டிசம்பர், 2019 முதல் சுமார் 1 வரும் 10 மாத காலமாக கொரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் எந்த நாட்டிலும் இந்த வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
தொடர்ந்து கொரோனா வைரஸ் உருமாறிக் கொண்டே இருப்பதே இதற்கு முதன்மையான காரணம். சில உருமாறிய கொரோனா வகைகள் முதலில் தோன்றிய வைரசை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதால், அதைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது.
முதலில் பிரிட்டன் நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய ஆல்பா கொரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் பிரிட்டன் நாட்டில் பல மாதங்கள் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அடுத்த மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்திய ஒன்று என்றால் அது டெல்டா கொரோனா தான். இந்தியாவில் முதலில் தோன்றிய இந்த டெல்டா கொரோனாவால் தான் இங்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டது. உலக நாடுகளிலும் இந்த டெல்டா கொரோனா தான் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக வேக்சின் போடாதவர்களை இந்த டெல்டா கொரோனா குறி வைத்துத் தாக்குகிறது.
டெல்டா கொரோனா வேகமாகப் பரவி, மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதால், உலக சுகாதார அமைப்பு இந்த டெல்டா கொரோனாவை கவலைக்குரிய கொரோனா வகையாக அறிவித்துள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் கொரோன மின்னல் வேகத்தில் பரவும் ஆற்றல் ஆகும்.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனாவை காட்டிலும் டெல்டா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மூக்கு பகுதியில் 1260 மடங்கு கொரோனா வைரஸ் அதிகமாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தடுப்பூசி போடாதவர்கள் இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டாலும்கூட, வேக்சின் போட்டவர்களையும்கூட இது குறி வைத்துத் தாக்குகிறது. டெல்டா கொரோனா வேகமாக நமது உடலைப் பாதிப்பதால், நோயெதிர்ப்பு சக்தி உருவாகி, பதிலளிக்க போதுமான நேரம் கிடைப்பதில்லை.
டெல்டா கொரோனா தான் இப்போது நமக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை என்றாலும்கூட, புதிதாகத் தோன்றும் வேறு சில உருமாறிய கொரோனா வகைகளும் நமக்குத் தலைவலியை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது.
பெரு நாட்டில் முதலில் கண்டறியப்பட்ட இந்த லாம்டா கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றே முதலில் ஆய்வாளர்கள் எச்சரித்தனர். இருப்பினும், இப்போது லாம்டா கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கிவிட்டது. ஜூலை மாதம் லாம்டா பாதிப்பு அதிகரித்தாலும், கடந்த ஒரு மாதமாகவே சர்வதேச அளவில் இதன் பாதிப்பு குறைந்தே வருகிறது. அதேநேரம் இந்த லாம்டா கொரோனா வேக்சின் தடுப்பாற்றலை குறைக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலில் கம்போடியா நாட்டில் கண்டறியப்பட்டது மூ (MU) கொரோனா. இது வேகமாகப் பரவுவதாலும் வேக்சின் ஆற்றலை குறைப்பதாலும் இதை கவனிக்க வேண்டிய கொரோனா வகையாக உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது. தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த மூ (MU) கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மூ (MU) வைரஸ் தங்கள் நாட்டிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் வகையில், பாதிப்பு அதிகமாக இருக்கும் நாடுகளிலிருந்து வருவோருக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளை இதர நாடுகள் விதிக்கின்றன.
கொரோனா உருமாறுவது இத்துடன் நிற்காது, இனியும் தொடரும் என்றே ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதுவரை உருவாகியுள்ள அனைத்து உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் வேலை செய்கிறது. இவை மோசமான பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை வேக்சின்கள் தடுக்கிறது என்றாலும் கொரோனா பரவலைத் தடுப்பதில்லை. இதனால் வைரஸ் வேகமாகப் பரவுகிறது.
கொரோனா பாதிப்பை மட்டுமின்றி பரவலையும் தடுக்கும் புதிய வேக்சின் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே கொரோனா கட்டுப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல வேக்சின் போடாத மக்களிடையே தான், கொரோனா வேகமாக உருமாறுகிறது. எனவே, பூஸ்டர் டோஸ் பணிகளை எல்லாம் தள்ளி வைத்து விட்டு, முதலில் 2 டோஸ் வேக்சின் போட்டுக்கொள்ள முடியாமல் திண்டாடும் பின்தங்கிய நாடுகளுக்கு நாம் உதவ வேண்டும்.
கொரோனா தொடர்ந்து உருமாறி, ஒரு கட்டத்தில் வேக்சினில் இருந்து தப்ப வாய்ப்புள்ளதால் அனைவருக்கும் வேக்சின் என்ற இலக்கை விரைவாக எட்டுவது மட்டுமே கொரோனாவை ஒழிக்க ஒரே வழி..!
No comments
Thank you for your comments