வாஷிங்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
வாஷிங்டன், செப்.23-
மூன்று நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வந்திறங்கிய பொழுது விமான நிலையத்தில் கூடிய இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் இருந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவருடன் வந்த இந்திய அமைச்சர்கள் உயர் அதிகாரிகளின் கார்கள் வரிசையாக வில்லார்டு இன்டரகான்டினென்டல் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தன.
பிரதமர் மோடி தங்கியிருக்கும் அந்த ஓட்டல் அமெரிக்க அதிபரின் அலுவலகம் மற்றும் வசிப்பிடமான வெள்ளை மாளிகையின் அருகில் உள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் முக்கிய பிரதிநிதிகள் ஹோட்டல் அறையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வரவேற்பு வழங்கினர். அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உருக்கமாக பேசினார்.
குளிர் மழை சாரலும் நிரம்பிய இந்த காலை வேளையில் விமான நிலையத்திலும் ஓட்டலிலும் இருந்த இந்திய வம்சாவளியினர் அன்புடன் எனக்கு வரவேற்பளித்தனர் அவர்களுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தான் இந்தியாவின் உண்மையான பலம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகிறேன் என்று தன்னை சந்திக்க காத்திருந்த இந்திய வம்சாவளியினரின் புகைப்படத்தை டிவிட்டரில் செய்தி வெளியிட்டார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு செல்லும்பொழுது அங்கு இந்திய வம்சாவழியினர் பெருமளவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரும் எண்ணிக்கையில் இந்தியர்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை.

No comments
Thank you for your comments