ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு பல லட்சம் பேரம்.. முழுவீச்சில் தொடக்கம்!
வேலூர்
உள்ளாட்சித் தேர்தலையொட்டி, வேலூர் மாவட்ட கிராமங்களில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பல லட்சம் ரூபாய் பேரம் நடந்து வருகிறது. இதை கண்காணிக்க தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு பதவியேற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016 அக்டோபர் 21ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, வார்டு மறுவரையறையால் 2016ம் ஆண்டிற்கான உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் நிறுத்தப்பட்டது. அதன்பின், கடந்த 2019ம் ஆண்டு, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்நிலையில், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் செப்டம்பர் 15ம் தேதிக்குள், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 13ம் தேதி அறிவித்தது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு, கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில், காட்பாடி, வேலூர், கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு, கணியம்பாடி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பதவியின்றி இருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சுயேச்சைகள் தரப்பில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர். இதேபோன்று, அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களிடம் விருப்ப மனு பெற்று, பட்டியலை இறுதி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும், கிராமங்களில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டி போடுவதற்கு, அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சுயேச்சைகள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவியை பிடிக்க, பல லட்சம் ரூபாய் பேரம் பேசப்படுகிறது. கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர், சுமூக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கோயில் கட்டுவதற்கும், கிராம பொது செலவுக்கும் பல லட்சம் ரூபாய் செலவிட தயாராக இருப்பதாகவும், பேரம் பேசி வருகின்றனர். இதன் மூலம் ஒரு சில கிராமங்களில், ஓட்டுகளை தங்களுக்கு ஆதரவாக மாற்றி ஊராட்சி மன்றத் தலைவராவதற்கு தீவிர முயற்சியில் களம் இறங்கியுள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பேரம் தொடங்கியுள்ளதால், கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறது. ஆனால், கிராமங்களில் லட்சக்கணக்கில் ஓட்டுக்கு பேரம் பேசுவது தொடங்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பேரம் நடப்பதைத் தடுக்க ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அல்லது கிராம உதவியாளர்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் கிராமங்களில் காலையில் திண்ணைப் பேச்சு என்று பேசுவது போன்று உட்கார்ந்து கொண்டு தாங்கள் விரும்பும் நபர்களுக்கு ÔபÕ வைட்டமினை வாரி வழங்கி விடுகின்றனர். இந்த திண்ணைப் பேச்சு நேற்று முன் தினம் முதல் நடக்கிறது. குறிப்பாகச் சொல்லப் போனால் ஒரு ஓட்டுக்கு தலா ரூ.ஆயிரம் வரையில் பேரம் நடக்கிறது. பரிசுப் பொருட்கள், கம்மல் போன்ற நகை வகைகளும் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இவற்றை தடுக்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் ஈடுபட வேண்டும்.
இரவு நேரங்களை காட்டிலும் பகல் வேளையில் பணப் பரிமாற்றம் நடப்பது குறிப்பிடத்தக்கது. விஏஓக்களை ஆங்காங்கே கண்காணிக்க செய்தால் பணப்பரிமாற்றம் தடுக்க வழிவகை ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வகுமார் பணப்புழக்கத்தை தடுக்க பல்வேறு வியூகங்களை வகுத்து கண்காணித்து வருவதால் பணப்பட்டுவாடா தடுக்கப்படும் என்று காவல் துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

No comments
Thank you for your comments