நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
சென்னை, செப்.26-
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நாளை (திங்கட்கிழமை) புது டெல்லியில் கூடுகிறது.
தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரியில் வழங்கவேண்டிய 28.8 டிஎம்சி தண்ணீரை உடனடியாக காவிரியில் திறந்து விடக் கோரி தமிழக அரசு சார்பில் தமிழக அதிகாரிகள் காவிரி ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
சம்பா பயிர் சீசன் செப்டம்பர் மாதத்தில் அல்லது அக்டோபர் மாதத்தில் துவங்குவது வழக்கம் அக்டோபர் மாதத்தில் துவங்குகிற சம்பா சீசனை தாமதமான சம்பா சீசன் என்று கூறுவது வழக்கம்.
சம்பா பயிர் சுமார் 97 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்படுவது வழக்கம். சம்பா பயிர் நேரடி விதைப்பு மூலமும் நாற்று விட்டு நடுவதன் மூலம் வளர்ப்பது வழக்கம்.
4 ஹெக்டேர் நிலத்தில் நாற்று நடவு செய்ய வேண்டுமானால் 1 ஹெக்டேர் நிலத்தில் நாற்று விடுவது வழக்கம். நாற்றங்கால் தயார் செய்து அதில் விதை தூவி நாற்றுக்களை வளரச் செய்ய செப்டம்பர் மாதத்திலிருந்து காவிரியில் கண்ணீர் விடப்பட வேண்டும் .அப்பொழுதுதான் நாற்றுக்களை விவசாயிகள் தயார் செய்ய முடியும்.
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தற்பொழுது 73.6 9 கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தினசரி 7 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணைக்கு தற்பொழுது தினசரி வரும் கண்ணீரின் அளவு 8 ஆயிரம் கன அடி ஆகும்.
குறுவைப் பயிரில் நாற்பத்தி ஏழுசதவீதம்தான் அறுவடை முடிந்திருக்கிறது. அதனால் காவிரியில் இப்பொழுது தண்ணீர் திறந்துவிடுவது காரிய சாத்தியமான வேலை அல்ல என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.
நடப்புக் காலத்தில் காவிரியில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவு 114. 6 டிஎம்சி ஆகும். இதில் சனிக்கிழமை வரை மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்த தண்ணீரின் அளவு 85. 8 டிஎம்சி ஆகும். இன்னும் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவு 28.8 டிஎம்சி ஆகும்.
இந்த தண்ணீரை கர்நாடகம் வழங்கினால் மூன்றாவது வாரத்தில் சம்பா பயிர் நடவடிக்கைகளை துவக்குவது சாத்தியமாகும். பருவ மழையை முழுக்க நம்பி இருப்பது புத்திசாலித்தனம் அல்ல. ஏனென்றால் அக்டோபர் மாதத்தின் இறுதியில் அல்லது நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும்.
அதுவரை சம்பா பயிருக்கான எந்த ஆயத்த ஏற்பாடுகளும் செய்யாமல் இருக்கமுடியாது. இந்த நிலைமையில் சம்பா பயிரை முழுக்க முழுக்க விதைப்பு பயிராக வளர்க்க திட்டமிட்டு செயல்படும்படி தமிழக அரசின் விவசாயத் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டு சம்பா பயிர் விளைவித்தல் கர்நாடகத்தில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் நிலுவை தண்ணீரைப் பொருத்து அமையும் என்று காவிரி நதிநீர் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

No comments
Thank you for your comments