Breaking News

ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டம் தொடக்கம்

சென்னை:

சென்னை தரமணியில் உள்ள விஞ்ஞானி MS ஸ்வாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் “ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி 2021-2022” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (26-9-2021) துவக்கினார்.

விஞ்ஞானிகள் எம்.எஸ்.ஸ்வாமிநாதன், சௌம்யா ஸ்வாமிநாதன், அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி 2021-2022” என்ற புதிய திட்டத்தை இன்று துவக்கி வைத்தனர்.

6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களில் அறிவியல் ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து, விஞ்ஞானிகளாக மாற்றும் திட்டம் இது. முதற்கட்டமாக மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

இந்நிகழ்விற்கு பின்னர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, 

2002 முதல் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சியை எம்.எஸ். ஸ்வாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகிறது.

'ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி' திட்டத்தை, மாவட்டந்தோறும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

CSR நிதி மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு நன்றி.

கொரோனா தொற்றைக் காட்டிலும் கற்றல் குறைபாடே மிகப்பெரிய தொற்றாக இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறப்பில் அனைத்து தரப்பினரின் கருத்தை அறிந்து, அதன் அடிப்படையிலேயே முதலமைச்சர் முடிவு எடுப்பார்கள்.

கொரோனா தடுப்பு ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அரசின் அறிவிப்பு வெளியாகும்போது, பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்பும் அதில் இடம் பெறும்.

மாணவர்கள் கட்டாயமாக பள்ளிக்கு வரவேண்டியது அவசியமில்லை; விருப்பமுள்ளவர்கள், வரவேண்டியவர்கள் பள்ளிக்கு வரலாம்  என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்றைய பேட்டியில் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வில், எம்.எஸ். சுவாமிநாதன் நிறுவனத் தலைவர் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி, டாக்டர் சௌம்யா சுவாமிநாதன், பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் (கல்வி) பாரதிதாசன், எம்.எஸ். சுவாமிநாதன் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மதுரா சுவாமிநாதன், செயல் இயக்குநர் டாக்டர் கே.எஸ். முரளி, எல் அண்டு டி நிறுவனத்தின் வினோத் ஜேக்கப் சாக்கோ ஆகியோர் பங்குபெற்றனர்.

No comments

Thank you for your comments