பொதுமக்களை போலீசார் ஒருமையில் அழைக்கக் கூடாது - டி.ஜி.பி. உத்தரவு
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வியாபாரி ஒருவர், தனது 16 வயது மகன் முன்பு போலீசார் தன்னை அவமரியாதையாக பேசியதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு வந்தபோது, போலீசாரிடம் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின் அடிப்படையில் கேரள டி.ஜி.பி. அனில் காந்த், அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பொதுமக்களிடம் காவல்துறையினர் கண்ணியமாகவும், பணிவாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் மரியாதையான வார்த்தைகளை மட்டுமே பொதுமக்களிடம் போலீசார் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் எக்காரணம் கொண்டும் பொதுமக்களை, ‘வா’ ‘போ’ என ஒருமையில் அழைக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள டி.ஜி.பி. அனில் காந்த், காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதே போன்று தமிழகத்திலும் ஆணை பிறப்பித்தால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
No comments
Thank you for your comments