Breaking News

காவல்துறையினரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்..!

சென்னை: 

காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்காக இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரையிலான ஆளிநர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருபவர்களுக்கு உதவியாகவும், அவர்களை இன் முகத்துடன் வரவேற்பதற்காகவும் வரவேற்பாளர் பணியிடம் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் எனக் கூறியுள்ளார். 



தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2021 -22ம் ஆண்டுக்கான காவல் துறை , தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகளின் விவாதம் நடைபெற்றது. காவல் மற்றும் தீயணைப்புத் துறைகள் தொடர்பான அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

காவல்துறையினரை மகிழ்ச்சிப் படுத்தும் வகையில்  பல எண்ணற்ற அறிவிப்புகளை முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமானவை...

சைபர் குற்றங்களை புலனாய்வு செய்ய தகுந்த பயிற்சி அளிக்கும் வகையில், மாநில இணையதளக் குற்றப்புலனாய்வு மையம் சென்னையில் உருவாக்கப்படும்.

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் நிகழ்வுகளை தடுக்கும் விதமாக, சென்னை காவல்துறையில் மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவு உருவாக்கப்படும்.

தீவிர குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் தீவிர குற்றவாளிகள் தடுப்புப்பிரிவு ஏற்படுத்தப்படும்.

சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின் தங்கிய சிறார், சிறுமிகள் தவறான வழியில் செல்வதை தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் 51 சிறார் மன்றங்கள் அமைக்கப்படும்.

கடலோர காவல் படையினருடன் இணைந்து பணி புரிய, 1000 மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படையினராக பணியமர்த்தப்படுவர்.

மீண்டும் காவல் ஆணையம் அமைக்கப்படும்.

காவல் உயர் அதிகாரிகளை பொதுமக்கள் இணையதள காணொலி மூலம் சந்தித்து புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சுற்றுலா காவல்துறை உருவாக்கப்படும்.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்படும்.

காவலர்களுக்கான இடர்படி ரூ.800-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி தரப்படும்.

காவல்துறையினர் மீது நிலுவையில் உள்ள சிறு தண்டனைகள் கைவிடப்படும்.

காவலர் முதல் ஆய்வாளர் வரை தாங்கள் பணி புரியும் மாவட்டங்களுக்குள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக செல்ல நவீன அடையாள அட்டை கொடுக்கப்படும்.

காவல்துறையினரின் பிரச்சனைகளை கேட்டு அதற்கு தீர்வு கொடுக்க சிறப்பு குறைதீர்ப்பு முகாம்கள் ஏற்படுத்தப்படும்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து உட்கோட்டங்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

மேற்கண்ட இந்த அறிவிப்புகள் அனைத்தும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து பேசிய போது முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டவைகளாகும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (13.9.2021) காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு,  சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், காவல்துறை இயக்குநர் (சிபிசிஐடி) முகமது ஷகில் அக்தர்,  மற்றும் காவலர்கள் சந்தித்து, காவலர்களின் நலனிற்காக வாரத்தில் ஒரு நாள் ஓய்வு, இடர்ப்படி உயர்வு, காவல் ஆணையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை காவல்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்தார்கள்.


No comments

Thank you for your comments