திருமாவளவன் ஒரு தலைவரா...? - ஹெச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல்.திருமாவளவனை சீண்டும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசியுள்ளார்.
திருமாவளவன் எல்லாம் ஒரு தலைவரா? சமூக விரோதி, தீய சக்தி, தேசவிரோதி என கடுமையான சொற்களால் விமர்சித்துள்ளார் ஹெச்.ராஜா
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா பேசியதாவது: வாரணாசி பல்கலைக் கழகத்தில் மகாகவி பாரதியாரின் நூறாவது ஆண்டு நினைவுநாளை ஒட்டி பாரதி இருக்கை ஒன்று அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பாரதி இருக்கை மூலம் அங்கு தமிழ் கற்பிப்பதற்கான ஏற்பாடுகளை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார். 7 கோடி தமிழர்கள் சார்பாக உண்மையான தமிழர் தலைவர் தேசியத் தலைவர் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுதான் ஒரு மொழியை வளர்க்கும் விதம்.
மற்றொரு மொழியை திட்டுவது, வெறுப்பு உணர்வை உருவாக்குவது என்பதற்கு பெயர் தமிழ்ப் பற்று அல்ல. உண்மையான தமிழ்ப் பற்றால் பிரதமர் மோடிதான். நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்றவர்கள், ஈ.வெ.ரா பாரம்பரியத்தில் வந்த திக, திமுகவை சேர்ந்தவர்கள், அடுத்த மொழி மீது வெறுப்புணர்வை காட்டுவதுதான் தமிழ் வளர்ச்சி என நினைக்கின்றனர். இவர்கள் தமிழின் வீழ்ச்சிக்கு வழிவகுப்பவர்கள். பிரதமர் மோடி தமிழின் வளர்ச்சிக்கு வழி வகுப்பவர்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவி நியமிக்கப்பட்டதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். ஆனால் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சிக்கிறார். என் அருமை நண்பர் மு.க. அழகிரி எதுவும் சொல்லவில்லை. கே.எஸ்.அழகிரியின் கல்லூரியில் பிரச்சனை இருக்கிறது. அவர் நடத்துகிற கல்லூரியில் ஊழல்கள் நடந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ஆளுநர் என்பவர் பல்கலைக் கழகங்களுக்கு வேந்தர். அதனால் கே.எஸ். அழகிரிக்கு பயம் இருக்கலாம். தென்னைமரத்தில் தேள்கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டுகிறதே.. அரசியலில் நாகரீகம் இருக்க வேண்டும்.
திருமாவளவன் எல்லாம் ஒரு தலைவரா? சரக்கும் மிடுக்கும் என பேசிய ஒரு சமூக விரோதி. தீயசக்தி. ஆளுநர் நியமனம் என்பது மத்திய அரசாங்கத்தின் உரிமை. ஆளுநர் என்பவர் அரசியல் சாசனத்தின் நிர்வாகி. ஆளுநர் நியமனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினே வரவேற்றுள்ள போது அவருக்கு பாராட்டுகள் தெரிவிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு சில்லுவண்டிகள், தேசத்துரோகிகள், தீயசக்திகள் பற்றி எல்லாம் பேசக் கூடாது. டெல்லியில் இருந்து கொண்டு தென்மாநிலங்களில் கொள்ளி வைப்பது தேசவிரோதம்தானே.. அதனால் திருமாவளவனுக்கு பயம் இருக்கலாம்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். இந்த கல்லூரிகள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் கீழ் வருமா? அல்லது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் கீழ் வருமா? என்கிற பல கேள்விகள் இருக்கின்றன.
பழனி முருகன் கோவிலுக்கு இந்துக்கள் செலுத்துகிற காணிக்கையில் நடத்தப்படுகிற கல்லூரியில் முஸ்லிம் பேராசிரியர்கள் எப்படி இருக்க முடியும்? அரசாங்கம் மதச்சார்பற்றதாக இருக்கலாம். ஆனால் அறநிலையத்துறை என்பது மதம்சார்ந்தது. இந்துக்களின் பணத்தை எடுத்து மற்றவர்களுக்கு சேவை செய்ய முடியாது. பிற மதத்தை சேரந்த மாணவர்கள் படிக்கட்டும்.
12.02.2018-ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி மகாதேவன், கோவில்கள் நிதியில் கல்லூரிகள் கட்டினால் தேவாரம், திருவாசகம் என மதம் சார் கல்வி ஒரு பாடமாக இருக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.
புண்ணுக்கு புணுகு போடுகிற வேலையை சேகர்பாபு செய்து வருகிறார். அதை நான் எதிர்க்கிறேன். அறநிலையத்துறை சட்டத்தை அமைச்சர் சேகர்பாபு மதிக்கவில்லை. இந்த சட்டத்தின் பிரிவுகளைப் பற்றி சேகர் பாபு பேசவே இல்லை. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு கடிதம் எழுத இருக்கிறேன்.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுகளில் எத்தனையை நிறைவேற்றவில்லை என்பதை அதில் குறிப்பிட இருக்கிறேன். ஆனால் படம் காட்டிக் கொண்டே இருக்கிறார். முதல்வரும் சேகர்பாபு அல்ல செயல்பாபு என்கிறார். அவர் செயல்பாபு அல்ல. இந்துக்களை ஏமாற்றுகிற வேலையை இந்து அறநிலையத்துறை செய்து வருகிறது. அரசியல் பழிவாங்கலில் திமுக அரசு ஈடுபட்டால் இன்னும் நான்கரை ஆண்டுகளில் மக்கள் தீர்ப்பை மாற்றி எழுதுவார்கள். அப்போது நீங்கள் பிரச்சனையில் மாட்டிக் கொள்வீர்கள். ஆகையால் தேவையில்லாத செயல்களை செய்ய வேண்டாம். இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.

No comments
Thank you for your comments