Breaking News

இளம் பெண் மர்மமான முறையில் மரணம் ... அண்ணனுக்கு போலீசார் வலைவீச்சு

விருத்தாசலம்:

இளம் பெண் மர்மமான முறையில் மரணம் , மனைவி சாவில் மர்மம் இருப்பதாக கணவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில்  இளம்பெண்ணின் அண்ணனுக்கு போலீசார் வலைவீச்சு...

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகே ப.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த சன்னியாசி மகன் முனியன் (32) இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த முனியன் மகள் அனிதா (31) இவர் சென்னையில் தனியார் மருந்தகத்தில் மருந்தாளுனராக பணிபுரிந்து வந்தார்.  

இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தநிலையில் கடந்த ஆண்டு ( 14.09.2020) தேதி வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டு சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். 

இதனால் அனிதாவின் குடும்பத்தினர் அனிதாவிடம் பேசாமல் இருந்துள்ளனர். அனிதா தனது வீட்டு சொத்தில் பங்கு கேட்டுள்ளார் இதனால் அனிதாவுக்கும் அவரது அண்ணன் ஆனந்தவேலுக்கும் இடையே ஏற்கனவே சொத்து பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில் ஆனந்தவேல் கடந்த 12ம் தேதி அனிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொத்தில் பங்கு பிரிப்பதற்கு பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டும் உடனடியாக பா.கொத்தனூருக்கு கிளம்பி வர வேண்டும் என அழைத்துள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் (13.09.2021) நள்ளிரவு 12 .30 மணியளவில் சென்னையிலிருந்து அனிதாவை ஊருக்கு பேருந்து ஏற்றி அனுப்பி வைத்துள்ளார் அவரது கணவர் முனியன் . அதிகாலை 7 மணியளவில் வேப்பூர் அடுத்த பா.கொத்தனூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு அனிதா வந்துள்ளார்.

அனிதாவின் அம்மா வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் அனிதாவின் அண்ணன் ஆனந்தவேல் மற்றும் அவருடைய மனைவி மட்டுமே இருந்துள்ளனர். 

இந்நிலையில் மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்த அனிதா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அனிதா இறந்த தகவலை அவரது கணவர் முனியனுக்கு தெரிவிக்காமலே அவசர அவசரமாக அனிதாவின் உடலை அவரது அண்ணன் ஆனந்தவேல் மற்றும் உறவினர்கள் மயானத்திற்கு கொண்டு சென்று எரித்துள்ளனர் .

அனிதா இறந்த தகவலறிந்து இரவு சென்னையிலிருந்து கிளம்பி பா.கொத்தனூருக்கு வந்த அவரது கணவர் முனியன் தனது மனைவி இறந்த செய்தியால் கதறி அழுதார்.

இதுகுறித்து முனியன் கூறியதாவது,

சொத்து பத்திரத்தில் கையெழுத்து போட என் மனைவியை அழைத்து கொன்று விட்டார்கள். என் மனைவி இறந்த தகவலை கூட என்னிடம் தெரிவிக்காமல் அவசரம் அவசரமாக அவளது உடலை எரித்து விட்டனர் என் மனைவி சாவில் சந்தேகம் உள்ளது என கூறினார்.

இதையடுத்து நேற்று தனது மனைவி அனிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வேப்பூர் காவல் நிலையத்தில் முனியன் புகார் அளித்தார். 

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். திட்டக்குடி டி.எஸ்.பி சிவா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு அனிதாவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

No comments

Thank you for your comments