Breaking News

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு


 

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில்  நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சிருமான  டாக்டர் எம்.ஆர்த்தி   அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்  வெளியிட்டார்.


தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசியில் ஆகிய 9 மாவட்டங்களில் இம்மாதத்திற்குள்  ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதையொட்டி   அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது  தீவிரமடைந்துள்ளன.

மேலும் அதற்கான தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம்  வெளியிட்டுள்ள நிலையில்  தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை கொண்டு 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கும் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு,  வாக்காளர் பட்டியல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.


அந்த வகையில்  காஞ்சிபுரம் மாவட்டத்தில்   காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் என 5 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை  முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்டரங்கில்   புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை  அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான  டாக்டர் எம்.ஆர்த்தி  வெளியிட மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ,வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர்  5 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 1281 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இம்மாதத்தில் நடைபெற உள்ளது.


இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியீடப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான மறு வரையறை செய்யப்பட்ட வார்டுகளின் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதில்  காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் 3 லட்சத்தி 31 ஆயிரத்து 266 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்தி 50 ஆயிரத்தி 387 வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 78 பேர் என மொத்தம் 6 லட்சத்தி 81 ஆயிரத்து 731 வாக்காளர்கள் உள்ளனர்.


மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இறுதிநாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கள் தொடர்பான விவரங்கள் வருவாய்த்துறையினரிடம் இருந்து பெறப்பட்டு  மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிகழ்வில்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உள்ளாட்சித் தேர்தல் ஸ்டீபன் ஜெயச்சந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் தேர்தல் தினகரன் மற்றும் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

✒ செய்தியாளர் E. ஜாபர் 

No comments

Thank you for your comments