Breaking News

6 மாத நிலுவை சம்பளம் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட டிபிசி பணியாளர்கள்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதம் முன்பு கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. அப்போது தற்காலிகமாக சுகாதார பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வீடு, வீடாக தொற்று அறிகுறிகள் தென்படுகிறதா, சர்க்கரை, ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்களா, தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதன்படி காஞ்சிபுரம் நகராட்சியில் 250 பேருக்கு தற்காலிகமாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள 51 வார்டுகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் தலா 5 முறைக்கு மேல் கணக்கெடுப்பு நடத்தினர்.  கடந்த ஏப்ரல் முதல் பணிபுரிந்தனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. மொத்தம்ஆறு மாத காலமாக சம்பளம் நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக நிலுவையில் உள்ள மாத சம்பளம் வழங்க கோரி தற்காலிக சுகாதார பணியாளர்கள் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் அவர் மேற்கொள்ளவில்லை என தற்காலிக ஊழியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- 

காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் கொரோனா கள பணியில் 250 பேர் பணிபுரிந்தோம். எங்களுக்கான ஆறு மாத ஊதியம் பல நாட்களான பிறகும் தராமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டால் சரியான பதில் கூறுவதில்லை. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 நாட்களில் சம்பளம் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. 20 நாட்களை கடந்தும் வழங்கவில்லை. எனவே எங்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

இதுகுறித்து காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் லக்ஷ்மியை தொடர்புகொண்டு கேட்கும்போது முதல் கட்டமாக ஒன்றரை மாத சம்பளம் இன்று வழங்கப்படும் என தெரிவித்தார் அடுத்து வரும் காலங்களில் நிலுவையில் உள்ள சம்பளம் வழங்கப்படும் என கூறியிருக்கிறார்.

No comments

Thank you for your comments