Breaking News

ஊராட்சித் துறையின் கீழ் ரூ.1597 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.1,597.59 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை 26,531 பயனாளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21/09/2021) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

ஊராட்சித் துறையின் சார்பில் முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட உதவிகள் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (கிராமின்) மற்றும் ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் 12,093 பயனாளிகளுக்கு ரூ.255.73 கோடி மதிப்பீட்டில் இலவச தொகுப்பு வீடுகள்,  தூய்மை பாரத இயக்கம் (கிராமின்) திட்டத்தின் கீழ் 167 பயனாளிகளுக்கு ரூ.55 இலட்சம் மதிப்பீட்டில் தனிநபர் இல்லக் கழிவறைகள், ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் 92 சமூக சுகாதார வளாகங்கள்,  1,293 பயனாளிகளுக்கு ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகள்,  ரூ.129.79 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணிகள், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் குடிநீர் இணைப்புகள் உள்ளிட்ட 2,217 பணிகள் மேற்கொள்வதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்  208 பயனாளிகளுக்கு வேலை அட்டையும், 233 பயனாளிகளுக்கு ரூ.5.48 கோடி மதிப்பீட்டில் ஆடு/மாட்டு கொட்டகைகள் அமைத்தல், 24 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் தனிநபர் கிணறுகள் அமைத்தல், 31 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு ரூ.7 இலட்சம் நிலுவை ஊதியம், ரூ.39.96 கோடி மதிப்பீட்டிலான குளங்கள் மற்றும் வரத்து வாய்க்கால் தூர் வாருதல், திறந்தவெளி சமுதாய கிணறுகள் அமைத்தல், அங்கன்வாடி கட்டடங்கள் கட்டுதல், சமுதாய கூடங்கள் கட்டுதல், மயான சுற்றுச்சுவர் கட்டுதல், சிறுபாலங்கள் அமைத்தல் மற்றும் தார்ச் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட 411 திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். 

மேலும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.862.22 கோடி மதிப்பீட்டிலான 4,978 சாலைகள் மற்றும் சிறுபாலங்கள், ரூ.5.79 கோடி மதிப்பீட்டிலான 664 தெருவிளக்குகள்,  மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14.13 கோடி மதிப்பீட்டிலான 96 பள்ளிக் கட்டடங்கள் / சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள், ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம், ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், 15-வது நிதிக்குழு மானியம் ஆகிய திட்டங்களின் கீழ் சிறு மின் விசைப்பம்பு அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், திறந்தவெளி கிணறு அமைத்தல், சமுதாயக் கூடம் அமைத்தல், சிறுபாலங்கள் / தரைப்பாலங்கள் அமைத்தல், சிமெண்ட் கான்கிரீட் / தார் சாலைகள் அமைத்தல், பள்ளிக் கட்டடங்கள் கட்டுதல் உள்ளிட்ட 4,024 திட்டப் பணிகள் ரூ.273.79 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கான ஆணைகளை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பிரவீன் பி.நாயர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. ம.பல்லவி பல்தேவ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments