ராகுல் காந்தியின் பதிவு ஒன்றை நீக்கிய டிவிட்டர்
புதுடெல்லி:
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமையின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாக ராகுல் காந்தியின் டிவிட்டர் பதிவு நீக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயது சிறுமியை மதகுருவும், இடுகாட்டில் பணியாற்றி வரும் 3 பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தனர். சிறுமியின் உடலைப் பெற்றோருக்குத் தெரியாமல் எரித்துவிட்டனர்.
பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அந்தப் புகைப்படத்தையும் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அதில், “தலித் குடும்பத்தின் மகள் இந்த தேசத்தின் மகளும்கூட” எனத்தெரிவித்து இருந்தார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் அடையாளத்தை ராகுல் காந்தி வெளிப்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது.
இது தொடர்பாக ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி புகாரையும் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் வினித் ஜிண்டால் என்பவர் அளித்தார்.
இதே விவகாரத்தில் டிவிட்டர் நிறுவனத்திற்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் "பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் அடையாளத்தை புகைப்படம் வாயிலாக வெளிப்படுத்துவது போக்சோ சட்டப்படி தவறானது. ஆகையால் டிவிட்டர் இந்தியா அந்தப் பதிவை நீக்குமாறு கேட்கிறோம்” எனக்கூறப்பட்டது.
இதனையடுத்து, ராகுல் காந்தியின் மேற்கூறிய பதிவை டிவிட்டர் நிறுவனம் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments
Thank you for your comments