Breaking News

சிறுமி மித்ராவிற்கு ரூ.16 கோடி மதிப்புள்ள ஊசி செலுத்தப்பட்டது .. !

பெங்களூரு: 

16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசியை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட நாமக்கல் மாவட்ட சிறுமிக்கு பெங்களூர் மருத்துவமனையில் இன்று செலுத்தியுள்ளார்கள். இந்த மருந்து வேலை செய்து, அந்த சிறுமி, சிரித்து விளையாட வேண்டும் என்று ஒட்டுமொத்த நாடும் வேண்டிக் கொண்டு இருக்கிறது. 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் - பிரியதர்ஷினி தம்பதி. இவர்களின் 2 வயது மகள் மித்ரா. மரபணு கோளாறான முதுகு தண்டுவட தசைநாா் சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளாா். 

நல்ல உடல்நிலையில் இருந்தவர் திடீரென நடக்க முடியாமல், சரியாக பேச, சுவாசிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். நன்கு சிரித்து விளையாடிய குழந்தைக்கு இந்த மாதிரியானதால் ஒட்டுமொத்த குடும்பமும், நிலை குலைந்து போயிருந்தது. 

விடை தெரியா கேள்வி...

பல மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தும், அந்த குழந்தைக்கு என்ன பிரச்சினை என்பது விடை தெரியா கேள்வியானது. 

மரபணு கோளாறு

ஒரு வழியாக, கோவையிலுள்ள ஒரு மருத்துவமனை, ஜெர்மனி நாட்டிற்கு குழந்தையின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சில மாதிரிகளை அனுப்பி பரிசோதனை செய்து பார்த்ததில், அந்த சிறுமி அரிய மரபணு கோளாறான முதுகு தண்டுவட தசைநாா் சிதைவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

 ஜீன் தெரபி சிகிச்சை

இதற்கு உடனே ஸோல்கென்ஸ்மா ஜீன் தெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இந்த சிகிச்சைக்கு வெளிநாட்டில் இருந்து 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை வாங்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். அந்த மருந்து செலுத்த வேண்டுமானால் இந்திய மதிப்பில் வரிகள் உட்பட 22 கோடி வரை செலவாகும் என்று கூறப்பட்டது.

இதனால் நிலைகுலைந்து போனது அந்த குடும்பம். ஆனாலும் மனம் தளரவில்லை. வந்தாரை வாழ வைக்கும்  நம் இனம், நமது மகளின் வாழ்வை காப்பாற்றாதா என்று நமது மக்களின் நல்ல மனது மீது அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. 

எனவே, மித்ராவிற்கு உதவுங்கள் என்று இணையத்தில் மிகப்பெரிய பிரச்சாரத்தை முன்னெடுத்து கிரவுட் ஃபண்டிங் செய்ய சதீஷ் குமார் முயற்சி எடுத்தார். குறைந்தது 10 ரூபாயாவது இந்த கணக்கிற்கு அனுப்புங்கள் என்று இணையம் முழுக்க பல நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கைகளை வைத்தனர்.

நம்பியவர்கள் கைவிடவில்லை. மூன்று லட்சத்திற்கும் மேலானவர்கள் மித்ராவின் மருத்துவ செலவிற்காக நிதியுதவி செய்தனர். அதேநேரம், வரி விதிப்பு பெரிய சுமை என்பதை உணர்ந்து, மத்திய அரசுக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் மூலம், மித்ரா குடும்பம் இந்த விஷயத்தை கொண்டு சென்றது. ZOLGENSMA என்ற அந்த குறிப்பிட்ட மருந்துக்கு இறக்குமதி வரியான ரூ.6 கோடி வரை தள்ளுபடி செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சம்மதித்தார்.

முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, மருந்து மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தார். மதிமுக பொதுச் செயலாளர் எம்.பி. வைகோவும், மத்திய அரசுக்கு இதே கோரிக்கையை முன் வைத்தார். கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் தனது தரப்பிலிருந்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை விளக்கிச் சொன்னார்.

அனைத்து தரப்பு ஆதரவாலும், ஒத்துழைப்பாலும், 6 கோடி இறக்குமதி ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த மருந்து வாங்க பணம் பெங்களூரிலுள்ள தனியார் மருத்துவமனை வாயிலாக அனுப்பப்பட்டது. 

இதையடுத்து, மருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இன்று, பெங்களூரிலுள்ள அந்த தனியார் மருத்துவமனையில், சிறுமி மித்ராவிற்கு ZOLGENSMA மருந்தை மருத்துவர்கள்  வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தினர். தொடர்ந்து மருத்துவர்கள் சிறுமி மித்ராவை கண்காணித்து வருகின்றனர். 

அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில், தங்களுக்கு உதவிய அனைத்து தரப்பினருக்கும், சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.




 

No comments

Thank you for your comments