உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் மநீம...! திமுக, அதிமுகவோடு கூட்டணி இல்லை... ஆலோசனை கூட்டத்தில் முடிவு...
சென்னை:
மக்களின் மனநிலையை உணர்ந்து அதற்கு ஏற்ப தேர்தல் அறிக்கையை தயார் செய்ய வேண்டும்.
கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி பெரிய அளவில் தடம் பாதிக்காமல் ஏமாற்றத்தை தழுவியது...
இந்த தேர்தல் தோல்விக்கு பின், மக்கள் நீதி மய்யத்தின் மூத்த உறுப்பினர்கள், துணை தலைவர் மகேந்திரன் உட்பட பலர் கட்சியில் இருந்து வெளியேறினார்கள். வரிசையாக மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறியது மநீம தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் மநீமவில் துணை தலைவராக இருந்த மகேந்திரன் உட்பட பல உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசனின் அடுத்த அரசியல் மூவ் என்னவாக இருக்கும், கட்சி ரீதியாக, அரசியல் ரீதியாக என்ன முடிவு எடுப்பார் என்று பெரிய கேள்வி எழுந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதோடு புதுச்சேரியிலும் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கட்சியில் முக்கிய உறுப்பினர்கள் இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலை பெரும்பாலும் மநீம புறக்கணிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாகிகள், செயலாளர்களிடம் கமல்ஹாசன் ஆலோசனை செய்தார். ஒவ்வொரு நிர்வாகிகளிடமும் கமல்ஹாசன் கருத்துக்களை கேட்டறிந்தார். கூட்டத்தின் முடிவில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் பேசிய கமல்ஹாசன், கட்சி நிர்வாகிகள் இப்போதே தேர்தல் பணியை தொடங்க வேண்டும். 9 மாவட்ட மக்களின் மனநிலையை உணர்ந்து அதற்கு ஏற்ப தேர்தல் அறிக்கையை தயார் செய்ய வேண்டும். அவர்களிடம் நேரில் சென்று பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைக்கு செவி மடுக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.
அதேபோல் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். நாம் திமுக, அதிமுகவோடு கூட்டணி வைக்க மாட்டோம். கூட்டணிக்கு வருபவர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்படும். கூட்டணிக்கு வரும் மற்ற கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கமல்ஹாசன் இந்த கூட்டத்தில் தீர்க்கமாக பேசி உள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக, பாண்டிச்சேரி நிர்வாகிகள், மாநிலச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் நீதி மய்யத்தின் தமிழக, பாண்டிச்சேரி நிர்வாகிகள், மாநிலச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் கட்சி வளர்ச்சிப் பணிகள், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினோம். pic.twitter.com/qFzpSLMwLL
— Kamal Haasan (@ikamalhaasan) August 26, 2021
No comments
Thank you for your comments