பள்ளிகளில் புகார் பெட்டிகள்.. அதிரடி உத்தரவு
சென்னை:
மாணவர்கள் தங்கள் புகார் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க வசதியாக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும் என்றும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை பாலியல் வன்முறைகளில் இருந்து தடுக்கும் வாரம் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2011ல் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, மதுரை அரசு பள்ளி ஒன்றில் நடந்த பாலியல் துன்புறுத்தல்தான்.. கிட்டதட்ட 98 மாணவிகள் இதில் பாதிக்கப்பட்டனர்... ஆனால் வழக்கு நடந்து தீர்ப்பு வருவதற்கு 7 வருடங்கள் ஆனதால், அதில் ஏராளமான மாணவிகள் வழக்கை திரும்ப பெற்றனர்... அந்த வழக்கு முடிவதற்குள் சில மாணவிகளுக்கு கல்யாணமே ஆகிவிட்டது.. ஆனால், அந்த வழக்கில் வழங்கப்பட்ட நிவாரண தொகையை பெறுவதற்கு அவர்கள் வரவில்லை.
இதற்கு பிறகு பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம் பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம்தான்.. இந்த சம்பவத்தை பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட, பாதிக்கப்பட்ட மாணவிகளே புகார்களை தெரிவிக்க முன்வந்தனர்.. அதுவும் பொதுவெளியில் புகார்களை ஸ்கிரீன் ஷாட் போட்டு பதிவிட்டனர்..
இந்த புகார்களின் அடிப்படையில்தான் விசாரணையும் தொடங்கி நடந்து வருகிறது.. இதுபோல, பாதிக்கப்பட்ட பெண்கள் துணிந்து புகார்களை சொல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
அதேசமயம் மாணவர்கள் மீதான நலன்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.. அதனால்தான், பத்மா சேஷாத்ரி பள்ளியாகட்டும், ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியாகட்டும், விசாரணைகள் துரிதமாகி கொண்டிருக்கின்றன.
பள்ளிகளில் அடுத்தடுத்து பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் வந்ததையடுத்து, பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகளை தமிழக அரசு கடந்த ஜுன் மாதம் வெளியிட்டிருந்தது..
அதில் 2 முக்கியமான அம்சங்கள் கூறப்பட்டிருந்தன. என்ன வென்றால், பள்ளிகளைச் சார்ந்த அனைத்து அங்கத்தினருக்கும் போக்சோ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாகும் வகையில் வருடந்தோறும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு கட்டகம் (Orientation Module) பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கி வழங்கப்படும் எனறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புகார்களை எளிதே தெரிவிப்பதற்காக பள்ளிவளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் (Safety Boxes) வைக்கப்படும் என்றும், அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை 'குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம்' என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு வெளியானபோதே பெரும் வரவேற்பை பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் பெற்றிருந்தது.. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் பேரவையில் மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பள்ளிகளில் ஆண்டுதோறும் நவம்பர் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை மாணவர்களை பாலியல் வன்முறைகளில் இருந்து தடுக்கும் வாரம் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது... மாணவர்களின் பாதுகாப்பை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும் "மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு" அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்களிடம் இருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் புகார்களை பெற கட்டணமில்லா தொலை பேசி எண் மற்றும் மின்னஞ்சல் வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை பள்ளிக்கல்வி இயக்குநரக வளாகத்தில் அமைக்கப்படும் என்றும், அனைத்து தரப்பினரிடமும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் கையேடு ஒன்று தயாரித்து வழங்கப்படும், சுய மதிப்பீட்டுக் கட்டகம் ஒன்றும் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, மாணவர்கள் தங்கள் புகார் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க வசதியாக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படுவதோடு, ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை பாலியல் வன்முறைகளில் இருந்து தடுக்கும் வாரம் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
சுருக்கமாக சொல்லப்போனால், ஏற்கனவே தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருந்த அத்தனை திட்டங்களையும் இன்றைய தினம் பேரவையில் அறிவிப்பாக வெளியாகி உள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருவதுடன், திமுக அரசு மீதான பெற்றோர்களின் நம்பகத்தன்மையையும் கூட்டி வருகிறது..
அதுமட்டுமல்ல, எத்தனையோ பள்ளிகளில், மாணவிகளுக்கு தங்களது சில ஆசிரியர்களால், பாலியல் டார்ச்சர் நிகழ்ந்து வரும் நிலையில், இந்த புகார் பெட்டியானது ஒரு எச்சரிக்கை பெட்டியாக அமையும் என்று நம்பப்படுகிறது.. அத்துடன் பெண் பிள்ளைகளை படிக்க அனுப்பும் பெற்றோர்களிள் வயிற்றிலும் பாலை வார்க்கும் அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது..!
No comments
Thank you for your comments