பணிபுரியும் பெண்களுக்கான இருசக்கர வாகன திட்டம் ரத்து
சென்னை, ஆக.20-
பணி புரியும் மகளிருக்கான இருசக்கர வாகன கடன் திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் முந்தைய அதிமுக அரசில் முக்கிய திட்டமாக வழங்கியது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெண்கள் அனைவரும் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பு காரணமாக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானியத் தொகையும் தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. அதனால் பணிபுரியும் மகளிருக்கான இருசக்கர வாகன கடன் திட்டம் இப்பொழுது தேவை இல்லை என்று தமிழக அரசு கருதுகிறது அதன் காரணமாக அந்த திட்டம் ரத்து செய்யப்படுகிறது.
2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை ஒட்டி உழைக்கும் மகளிருக்கான இருசக்கர வாகன கடன் திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
இந்த திட்டப்படி இருசக்கர வாகனத்தின் ஒட்டுமொத்த மதிப்பில் 50% அல்லது 25,000 இதில் எது குறைவோ அந்த தொகையை மானியமாக வழங்கப்படும். மேலும் உடல் ஊனமுற்றவர்களுக்கான 6,250 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் இந்த திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் 250 கோடி ரூபாய் அரசு செலவிட்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2.07 லட்சம் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன அதற்கான மொத்த செலவு ரூபாய் 4608.75 கோடியாகும்.
வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகளுக்கு இலவசமாக ஆடு, வெள்ளாடு, கறவை பசு ஆகியவற்றை வழங்கும் திட்டமும் ரத்து செய்யப்படுகிறது. சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை குடில் திட்டமும் ரத்து செய்யப்படுகிறது.
நீர்நிலைகள் அனைத்திலும் குடிமராமத்து திட்டத்தை அமல் செய்வதற்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்நிலைகளுக்கு புத்துயிர் தந்து அவற்றை மேம்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு பின்பற்ற தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. வறுமை கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் திருத்தி அமைக்கப்படுகிறது. அதேபோல மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதற்கு பதிலாக ரூ. 670 கோடி செலவில் டேப்லெட்ஸ் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments