Breaking News

நிதி சுமையால் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்த இயலவில்லை - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை, ஆக.20-

நிதி சுமையால் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்த இயலவில்லை. மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைந்ததன் காரணமாக தினமும் 12 சதவீத அளவுக்கு பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப் பேரவையில் தெரிவித்தார்.


சட்டசபையில் நேற்று, பொது பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்து பேசினார்.

அப்போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

கற்பித்தல் வாசிப்பு இயக்கம்

கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிக்கூடங்கள் நடக்கவில்லை.  இந்த சூழலில் மாணவர்களை திடீரென பள்ளிக்கு அழைத்து வகுப்புகள் நடத்தினால் பலர் வர விரும்ப மாட்டார்கள். ஆசிரியர்களுக்கும் தயக்கம் இருக்கும்.

இந்த சூழ்நிலையில் தற்போது குழந்தை திருமணங்களும், குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

இவற்றை திருத்தும் வகையில் மிகச் சிறந்த திட்டமாக ‘கற்பித்தல் வாசிப்பு இயக்கம்‘ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது பற்றிய விவரங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவிப்பார்.

இந்த திட்டத்துக்கு இந்த நிதி ஆண்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகளை நடத்தும் திட்டம் இதுவாகும்.

அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கம் கொடுக்கும் வகையில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பெட்ரோல் மீதான வரி குறைப்பு

பெட்ரோல் மீதான வரி ரூ.3 குறைக்கப்பட்டதால் நேரடியாக மக்களுக்கு பலன் கிடைத்துள்ளது. பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைந்ததன் காரணமாக தினமும் 12 சதவீத அளவுக்கு பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் 11.29 லட்சம் லிட்டர் பெட்ரோல் கூடுதலாக விற்பனையாகி உள்ளது.

இதனால் மத்திய அரசுக்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாக 3.55 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். முதலமைச்சர் செய்த விலை குறைப்பு நடவடிக்கையால் மத்திய அரசுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருமானம்  கிடைக்கும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

நிதி சுமை

வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என நினைத்தாலும், நிதி நிலைமை மந்தமாக உள்ளதால் அதை நிறைவேற்ற முடியாத சூழல் இருப்பதாக  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அரசு ஊழியர்களின் கோரிக்கை கடந்த 18 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், பல அரசுகள் மாறி மாறி வந்தாலும், அரசின் நிதிச்சூழல் காரணமாக அதை நிறைவேற்ற முடியவில்லை என்றார்.

அனைத்து துறைகளிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் 

அனைத்து துறைகளிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் வர உள்ளன. தரமற்ற கட்டிடங்களை ஆய்வு செய்வதுபோல் பல துறைகளில் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. இது பழி வாங்கும் நடவடிக்கை இல்லை. புரிதலுக்கான நடவடிக்கை.

நந்தனத்தில் உள்ள நிதித்துறைக்கு சொந்தமான கட்டிடத்துக்கு முன்னாள் நிதி அமைச்சர் பேராசிரியர் கே.அன்பழகன் மாளிகை என்ற பெயர் சூட்டப்படும்.

தாம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த போது முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை தற்போது அமைச்சர் ஆகியும் நிறைவேற்ற முடியவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், இதற்குக் காரணம் தற்போதைய நிதி சூழல் தான் என்றும் ஆதங்கம் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.  தொடர்ந்து பல்வேறு விளக்கங்களை அளித்தார்.

No comments

Thank you for your comments