புகார் கொடுப்பவர்களையே மிரட்டும் காட்பாடி காவல் நிலைய போலீஸார்!
கந்து வட்டி கொடுமை தலைவிரித்தாடும் தொடர் கதை
வேலூர், ஆக.11-
புகார் கொடுப்பவர் களையே மிரட்டும் பணியில் காட்பாடி காவல் நிலைய போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கந்து வட்டி கொடுமை தலைவிரித்தாடும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டிஐஜி ஆகியோர் காட்பாடி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸாரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?என்பதே பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி காவல் நிலையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இந்த காவல் நிலையம் முன்னாள் காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு பணியில் இருந்த வரை ஒழுங்காக இயங்கியது. முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. பொதுமக்கள் தரும் புகார்கள் மீது உடனுக்குடன் விசாரணை நடத்தி புகார்கள் தீர்க்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அண்மையில் காவல் ஆய்வாளராக ஆனந்தன் என்பவர் பொறுப்பேற்றதும் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. காட்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்வோர் காவல் உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர் சகிதம் மிரட்டப்படுகின்றனர். புகார்தாரரிடமே எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பும் நிலைதான் தொடர்ந்து நிலவி வருகிறது. காட்பாடி டிஎஸ்பி பழனி போன்றோரை கூட காவல் ஆய்வாளர் ஆனந்தன் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகிறது.இப்படி உயரதிகாரிகளை மதிக்காமல் நடக்கும் காவல் ஆய்வாளர் ஆனந்தன் தன்னுடன் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட யாரையும் மதிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவல் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் காவல் நிலையத்துக்கு சென்று புகார் தருவோரை மிரட்டி அனுப்புவதையும் வழக்கமாக கொண்டுள்ளார் ஆனந்தன்.
இப்படித்தான் காட்பாடி பகுதியில் நடந்த கந்து வட்டி கொடுமை நிகழ்ச்சியிலும் காவல் ஆய்வாளர் ஆனந்தன், சிறப்பு உதவி ஆய்வாளர் சதாசிவம் ஆகியோர் நடந்து கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்யவில்லை. இந்த புகார் மனு குறித்து விரிவாக பார்க்கலாம். வேலூர் மாவட்டம், காட்பாடி கிளத்தான்பட்டரை ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆதியம்மாள்(65). இவர் சாலையோரம் கிடக்கும் பேப்பர் அட்டைகள், காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து அதை பழைய பேப்பர் கடைகளில் கொடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது மகன் பாபு. இவர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளார். அதாவது ஆண் சித்தாளாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளா. இவர் பல வீடுகளில் பாத்திரம் கழுவியும், துணிகளை துவைத்தும் ஜீவனம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடும்பத்தின் அவசர தேவைக்காக ஆதியம்மாள் கடந்த 2019ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த வேதகிரி என்பவரிடம் ரூ.2 லட்சம் வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். இதற்காக தங்களது வீட்டு பத்திரத்தை வேதகிரியிடம் கொடுத்துள்ளார். இதற்கிடையே வாங்கிய பணத்துக்கு மாதம் ஒன்றுக்கு ஆதியம்மாள் குடும்பத்தினர் மூவரும் சேர்ந்து ரூ.6 ஆயிரத்தை வட்டியாக வேதகிரிக்கு செலுத்தி வந்துள்ளனர்.
கொரோனா காலம் தொடங்கியதால் வேலையின்றி வீடுகளில் முடங்கிய குடும்பத்தினரால் பணக்கஷ்டம் ஏற்பட்டது. இதனால் வட்டியை செலுத்த முடியாமல் போனது. இந்நிலையில் தாங்கள் எழுதி கொடுத்தது போன்று இன்னமும் 3 மாதம் கால அவகாசம் இருப்பதாக ஆதியம்மாள் தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால் அதற்குள் வேதகிரி மற்றும் அவரது மருமகன் சத்தியராஜ் எனும் திமுக பிரமுகர் திருவலம் அருகே உள்ள அம்முண்டி சுகர்மில் பகுதியைச் சேர்ந்த பாபு என்ற அடியாளை கொண்டு ஆதியம்மாள் வீட்டுக்கு அனுப்பி தகாத அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி பணத்தை தருகிறாயா இல்லை வீட்டை எங்கள் பெயருக்கு பெயர் மாற்றம் செய்து தருகிறாயா? என்று கேட்டு மிரட்டல் விட்டு வந்தனர். இதனால் பொறுமையிழந்த ஆதியம்மாள் காட்பாடி காவல் நிலையத்தில் கந்து வட்டி கொடுமை தாங்காமல் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சதாசிவம் ஆதியம்மாளிடம் விசாரணை நடத்தினார். எதிர் தரப்பைச் சேர்ந்த வேதகிரியை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரிக்கவே இல்லை. எழுதி வாங்கவும் இல்லை. மாறாக ஆதியம்மாளிடம் நீ எப்போது பணத்தை தருகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு 2 மாதங்களுக்குள் நான் சீட்டு கட்டியுள்ள பணம் ரூ.2 லட்சம் வரும் அதை கொடுத்து விடுகிறேன் என்று எழுதி வாங்கிக கொண்டு சிஎஸ்ஆர் பதிவு செய்து ஆதியம்மாளிடம் கொடுத்துள்ளார். அந்த சிஎஸ்ஆர் பதிவு எண்:504/2021 ஆகும். திமுகவினர் எங்கும் யாரையும் மிரட்டக் கூடாது எனறும், திமுக ஆட்சிக்கு அவப்பெயரை யாரும் சேர்க்க கூடாது என்றும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் இருந்த போதிலும் மு.க.ஸ்டாலின் உத்தரவை காற்றிலே பறக்க விட்டு விட்டு இதுபோன்ற திமுக உறுப்பினர் வேதகிரி வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஆதியம்மாள் குடும்பத்தை அடியாட்களை வைத்து மிரட்டி ரூ.3க்கு கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்தியும் அச்சுறுத்தியும் வருகிறார்.
இதுபோன்ற நபர்களை காவல் நிலையம் அழைத்து உங்கள் மீது புகார் வந்துள்ளது என்று கூறி அவரிடம் எழுதி வாங்காமல் புகார் தந்த ஆதியம்மாளிடம் எத்தனை மாதத்தில் பணத்தை திருப்பி தருவாய் என்று எழுதி வாங்கிக் கொண்டு எஸ்எஸ்ஐ சதாசிவம் அனுப்பியது எவ்வகையில் நியாயம் என்பதை பொதுமக்களும், காவல் துறையில் பணியாற்றும் கண்ணியமிகு காவல் துறை உயரதிகாரிகளும்தான் சொல்ல வேண்டும். ரூ.2 லட்சத்தை கொடுத்து விட்டு ரூ. 10லட்சம் மதிப்புள்ள வீட்டை எழுதி வாங்க துடிக்கின்றார் கந்துவட்டிக்காரர் வேதகிரி. அத்துடன் சிஎஸ்ஆர் வாங்கி விட்டால் நான் என்ன பயந்து விடுவேனா என்று காவல் நிலையத்தின் வாசலிலேயே கொக்கரித்துள்ளார் வேதகிரி என்றும் சொல்லப்படுகிறது. காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காவல் நிலையங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கையோ, உத்தரவோ பிறப்பிக்க வேண்டும் என்று கந்து வட்டியால் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். காட்பாடி காவல் நிலையத்துக்கு திருநாவுக்கரசு போன்ற கண்ணியமிகு காவல் ஆய்வாளர்களை பணிநியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வகுமார், வேலூர் சரக டிஐஜி பாபு ஆகியோர் இப்படி கந்து வட்டியால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தாக நினைக்கும் ஆதியம்மாள் குடும்பத்தாரை வேலூர் மாவட்ட காவல் துறையினர் காப்பாற்றுவார்களா? இல்லை அவரை குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள வழிவகை செய்து விடுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
🔏 நிருபர் வாசுதேவன்
No comments
Thank you for your comments