Breaking News

தனியார் டிவி விவாதங்களை தவிர்த்து அதிமுக, பாஜக தேடும் புதிய பாதை...!

சென்னை :

தனியார் தமிழ் செய்தி சேனல்களில் நடைபெறும் அரசியல் விவாத நிகழ்ச்சிகளில் அதிமுக மற்றும் பாஜக பங்கேற்பதை தவிர்த்து வருகின்றன.

நெறியாளர்கள் தங்களை கட்டம் கட்டி கேள்விகள் கேட்கிறார்கள், திமுகவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இதையடுத்து சமீப காலமாக இந்த இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கிடையாது.

கட்சித் தலைமையே அறிக்கை வெளியிட்டு இவ்வாறு தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்பதை உறுதிபட தெரிவித்திருந்தன.

தற்போது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். எதிர்தரப்பில் கருத்து கூறுவதற்குதான் ஆள் இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது. நடுநிலையாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பிற தரப்பினர் கருத்துக்களை கூறுகிறார்களே தவிர பாஜக மற்றும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் கிடைப்பது கிடையாது.


ஆரம்பத்தில் இது நல்ல முடிவு என்று பாஜக மற்றும் அதிமுக கட்சி தலைவர்கள் நினைத்தாலும், இப்போது விவாத நிகழ்ச்சிகளில் தங்கள் தரப்புக்கு பதில் சொல்ல ஆளில்லை என்ற நிலை உருவாகி உள்ளது அவர்களுக்கு பின்னடைவாக பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில்தான் தனியார் டிவி சேனல்களுக்கு போட்டியாக தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் அரசியல் விவாத நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தேர்தல் காலங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியினருக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அவர்கள் கட்சியின் கொள்கைகள் பற்றி பேசுவதற்கு பொதிகை டிவியில் அவகாசம் வழங்கப்படுவது வழக்கம். இதைத் தாண்டி மற்ற நாட்களில் பொதிகை தொலைக்காட்சியில் அரசியல் பேசுவது மிக மிக அபூர்வம். 

அரசு தொலைக்காட்சி என்பதால் பாரபட்சமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் மிகவும் கவனமாக சர்ச்சைகளை தவிர்த்து விடுவார்கள் பொதிகை டிவி நிர்வாகத்தினர்.


அதே நேரம் அனைத்துக் கட்சியினருக்கும் வாய்ப்பளித்து அரசியல் விவாத நிகழ்ச்சிகளை நடத்தலாம், சர்ச்சைகள் இல்லாமல் வெறும் விவாதம் என்ற அடிப்படையில் மட்டும் அவர்களை நடத்திச் செல்லலாம் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் அது துறையின் இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இந்த ஆலோசனைகளில் இருப்பதாக செய்திகளும், தகவல்களும் வெளியாகியிருக்கின்றன. 

ஒருவேளை அப்படி அரசியல் விவாத நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டால் அதில் அதிமுக மற்றும் பாஜக பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த வியூகம் அல்லது இந்த திட்டம் எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது தெரியாது. 

என்னதான் அனல் பறக்க விவாத நிகழ்ச்சிகளை நடத்தினாலும் இழந்துபோன பார்வையாளர்களை தூர்தர்ஷன் மீட்டெடுப்பது என்பது அவ்வளவு சீக்கிரம் நடக்கக்கூடிய காரியம் இல்லை. 

1990களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் அனைத்து இல்லங்களிலும் பார்க்கப்பட்டது. இப்போது டிடிஎச் அல்லது கேபிள் கனெக்சன் என எதிலுமே அந்த சேனலை அப்படியே தாண்டி வேறு சேனலுக்கு செல்கிறார்கள் பார்வையாளர்கள். காலத்துக்கு ஏற்ப அதன் வேகம் மாறாமல் இருப்பது இதற்கு முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு உள்ளது.

ஒட்டுமொத்தமாக தூர்தர்ஷன் பணியாற்றும் விதத்தை காலத்திற்கேற்ப மாற்றாமல் அரசியல் விவாத நிகழ்ச்சிகளை நடத்தினால் மட்டும் பார்வையாளர்கள் அங்கு சென்று பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது என்கிறார்கள் இந்த துறை சார்ந்த வல்லுநர்கள். 

இந்த திட்டம் நடைமுறைக்கு வருமா அல்லது அதிமுக மற்றும் பாஜக தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொலைக்காட்சி மற்றும் சமூக தொடர்பு ஊடக விவாதங்களில் இனி பங்கேற்காது... அதிமுக அறிவிப்பு


No comments

Thank you for your comments