Breaking News

வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட அம்மா சிமெண்ட் நிறுத்தம் கட்டுமானப் பணி செய்ய முடியாமல் மக்கள் அவதி!

 வேலூர் :

வேலூர் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் வீடு கட்ட சலுகை விலையில் வழங்கிய அம்மா சிமெண்ட் விற்பனை நிறுத்தியதால் பயனாளிகள் பாதிக்கின்றனர்.


ஏழை, எளியோர் களுக்கு பசுமை வீடு, ஐ.ஏ.ஒய், தானே வீடுகள், குடிசை மாற்று வாரியம் வீடுகள் என பல்வேறு திட்டத்தில் வீடுகள் வழங்கப்படுகின்றன. இந்த வீடுகள் கட்டி முடிக்க அரசு ரூ. 2 லட்சம் வழங்குகிறது. விலைவாசி உயர்வால் இந்த தொகைக்கு வீடு கட்ட முடியாது. வீடு கட்டும் பணிக்கு சிமெண்ட் அதிகம் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் ஜெ., அரசின் மலிவு விலையில் அம்மா சிமெண்ட் வழங்க உத்தரவிட பட்டது. அரசு சிமெண்ட் கழகம் சார்பில் குறைந்த விலையில் அம்மா சிமெண்ட் வழங்கப்பட்டது. குறைந்தபட்சம் 100 சதுர அடியும், அதிகபட்சமாக 1500 சதுர அடி வரையும் வீடு கட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்டட திட்ட வரைபடம் அல்லது வி.ஏ.ஓ., உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு மூட்டை விலை ரூ. 190க்கு அம்மா சிமெண்ட் வழங்கப்பட்டது.

புதியதாக வீடு கட்டுபவர்களுக்கு குறைந்தபட்சம் 750 மூட்டைகளும், பழைய வீட்டை புதுப்பிக்க குறைந்தபட்சம் 100 மூட்டை சிமெண்ட் வழங்கப்பட்டன. பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மூட்டை லோடு வந்தவுடன் பயனாளிகளுக்கு தகவல் தெரிவித்து சிமெண்ட் வழங்கப்பட்டது. வெளி மார்க்கெட்டில் சிமெண்ட் விலை ரூ. 460க்கு மேல் உயர்ந்ததால் அம்மா சிமெண்ட் விலையும் ரூ. 210 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் அம்மா சிமெண்ட் வாங்க ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானதால் அம்மா சிமெண்ட் விற்பனையும் நிறுத்தப்பட்டது. தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்து 3 மாதங்களாகின. ஆனால் அம்மா சிமெண்ட் விற்பனை இன்று வரை தொடங்கவில்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், அம்மா மருந்தகம் உள்ளிட்ட திட்டங்கள் தி.மு.க., ஆட்சியில் தொடர்கின்றன. ஆனால் அம்மா சிமெண்ட் விற்பனை மட்டும் இன்னும் தொடங்கவில்லை.

இதனால் ஏழை, எளிய மக்கள் வீடுகள் கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் கனவு நனவாகுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்து அரசு பரிசீலனை செய்து அம்மா சிமெண்ட் விற்பனைக்கு அனுமதியளிக்க வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments

Thank you for your comments