Breaking News

உபி முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் காலமானார் - பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் நேரில் அஞ்சலி

லக்னோ:

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடல்நலக் குறைவால் நேற்றிரவு (21-8-2021) காலமானார். கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் (வயது 89),  உடல்நலக்குறைவு காரணமாக லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் தொற்று பாதிப்பு ஏற்பட்டதாலும் சுய நினைவு குறைந்ததாலும், ஜூலை 4-ம் தேதி லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மருத்துவமனையின் சிறுநீரகவியல், இதயவியல், நரம்பியல், எண்டோகிரைனாலஜி மற்றும் நியூரோ-ஓட்டாலஜி துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்தும் கல்யாண் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. உடல் உறுப்புகள் தொடர்ந்து செயலிழந்தன.  இந்நிலையில் நேற்றிரவு கல்யாண் சிங் காலமானார்.

கல்யாண் சிங் உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி - தலைவர்கள் இரங்கல்

கல்யாண் சிங்  மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று காலை நேரில் சென்று கல்யாண் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடி டெல்லியில் இருந்து அஞ்சலி செலுத்துவதற்காக உத்தர பிரதேச மாநிலத்திற்கு வந்தார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பா.ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் வரவேற்றனர்.  


பின்னர், பிரதமர் மோடி லக்னோ சென்று கல்யாண் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்தியப் பாதுகாப்பு துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங், கல்யாண் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்


No comments

Thank you for your comments