அகவிலைப் படி உயர்வை வழங்க கோரி...மாநிலம் முழுவதும் செப்.8ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
சென்னை:
தமிழக அரசு ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.8-ம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் அச்சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் பி.கே.சிவக்குமார், மாநில அமைப்புச் செயலாளர் வி.சிவக்குமார், மாநில துணைத் தலைவர் ஜி.ஜெயச்சந்திரராஜா, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், தமிழ்நாடு சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மகேந்திரன், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் முகமது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வை வழங்கியது போல், தமிழக அரசு ஊழியர்களுக்கும் உடனடியாக எந்தவித பொருளாதார காரணங்களையும் முன்வைக்காமல், அகவிலைப் படியை 28 சதவீதத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
பொதுவிநியோகத் திட்டத்துக்கு தனி துறையை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அரசுப்பணிகளில் காலியாக உள்ள இரண்டரை லட்சம் பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும்.
அரசுப் பணிகளில் ஒப்பந்த பணி முறையை கைவிட வேண்டும், டாஸ்மாக், ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்டவைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களை நிரந்த ஊழியர்களாக்கி, நிரந்த ஊதிய விகித்தில் ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரமாகவும், ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், வரும் செப்.8-ம் தேதி மாநிலம் முழுவதும் தமிழ்நாடுஅரசு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மேலும் எங்களது கோரிக்கைகளை எடுத்துக்கூற தமிழக முதல்வருக்கு கடிதம் வழங்கியுள்ளோம். விரைவில் எங்களை முதல்வர் அழைத்துப் பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
No comments
Thank you for your comments