அரை மணி நேரத்தில் 134 வகையான உணவுகள் தயாரித்து சாதனை படைத்த தமிழ் பெண்
திருமங்கலம்:
கேரள மாநிலத்தை சேர்ந்த ஹேயன் என்ற 10 வயது சிறுவன் ஒரு மணி நேரத்தில் 172 வகையான உணவுகள் தயாரித்ததே சாதனையாக இருந்தது. இதனை முறியடிக்கும் வகையில், திருமங்கலத்தில் அரை மணி நேரத்தில் 134 வகையான உணவுகள் தயாரித்து பெண் சாதனை படைத்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் இந்திரா ரவிச்சந்திரன். இவர் சமையல் கலையில் சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்காக பல நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டு “இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” மூலமாக அரை மணிநேரத்தில் 130 வகை உணவுகளை தயார் செய்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
திருமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடு நடந்தது. இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிர்வாகியின் மேற்பார்வையில் அசைவ, சைவ உணவு வகைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
விதவிதமான தோசைகள், இட்லி, ஊத்தப்பம், ஆம்லெட், ஆப்பாயில், வடை, பஜ்ஜி, பல்வேறு வகையான பணியாரம் மற்றும் கொழுக்கட்டைகள், புட்டு, சிக்கன் குழம்பு, சிக்கன் பிரியாணி, மீன் குழம்பு மற்றும் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், கேக் வகைகள் உள்ளிட்ட விதவிதமான உணவு வகைகளை தயார் செய்தார்.
அரை மணி நேரத்தில் பரபரப்பாக தனி ஆளாக செயல்பட்டு இந்த உணவு வகைகளை தயார் செய்து நிர்ணயிக்கப்பட்ட 30 நிமிடத்தில் கூடுதலாக 4 வகை உணவுகளையும் சேர்த்து மொத்தம் 134 வகையான உணவுகளை தயார் செய்தார்.
இதற்கு முன்பு கேரள மாநிலத்தை சேர்ந்த ஹேயன் என்ற 10 வயது சிறுவன் ஒரு மணி நேரத்தில் 172 வகையான உணவுகள் தயாரித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்திரா ரவிச்சந்திரன் முறியடித்து, இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இவரது முயற்சியை அனைவரும் பாராட்டினர்.
இதுகுறித்து இந்திரா ரவிச்சந்திரன் கூறுகையில்,
அடிப்படையிலேயே நான் சமையல் வேலைகளை வேகமாக செய்து முடிப்பேன். கணவர் ரவிச்சந்திரன் என்னுடைய திறமையை பார்த்து சமையல் கலையில் சாதனை புரியலாமே என்று ஊக்கம் அளித்ததால் இந்த சாதனையில் ஈடுபட்டேன். இதற்காக பல நாட்கள் பயிற்சி செய்த பின்னரே இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தேன். இந்த சாதனைக்கு எனது குடும்பத்தினர் ஊக்கம் அளித்தனர் என்றார்.
No comments
Thank you for your comments