Breaking News

வேலூரில் களவு போகும் ரேஷன் அரிசி .... ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சதியா..?

வேலூர்:

வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில களவு போகும் ரேஷன் அரிசி மூட்டைகளை தினசரி பார்க்க முடிகிறது. இதன் வாயிலாக திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சதி நடக்கிறதா? என்று எண்ணத் தோன்றுகிறது..

அரிசியை பறக்கும் படை போலீசார் பறிமுதல்.


வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. இதை தடுக்க வேண்டியவர்கள் பெயரளவில் மட்டுமே பணிபுரிகின்றனர். இதற்கு சில ரேஷன் கடை விற்பனையாளர்கள், எடையாளர்கள் மறைமுகமாக உதவுகின்றனர். ஆனால் ஒரு முறை கூட இவர்கள் சிக்கியதே இல்லை. சட்டத்துக்கு புறம்பான காரியங்களில் யார் ஈடுபட்டாலும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம் என கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தவறு செய்பவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே ஆகும். 

ஆனால் கட்சி பாகுபாடு இல்லாமல் வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் கொடி கட்டி பறக்கிறது. வறுமையில் வாடும் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகள் வாயிலாக விலையில்லா அரிசியை விநியோகம் செய்து வருகிறது. இந்த அரிசியை வாங்க பலர் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படி வாங்கினாலும் இட்லி மாவு விற்பவர்களிடம் விற்று விடுகின்றனர். சிலர் அரிசியை அரிசி ஆலை உரிமையாளர்கள், புரோக்கர்கள் பெற்று பாலீஷ் செய்து கர்நாடகா புழுங்கல் அரிசி என்றும், ஆந்திர புழுங்கல் அரிசி என்ற பெயரிலும் விற்பனை செய்து கல்லா கட்டுகின்றனர். சிலர் அந்த அரிசியை பவுடராக்கி அரிசி, முறுக்கு மாவாக மாற்றி விற்பனை செய்கின்றனர். மாடுகளுக்கும் உணவாக தருகின்றனர். இதனால் வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் அரிசி கடத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இப்படி கடத்தல் நடந்து வந்தாலும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரும், மாவட்ட வழங்கல் மற்றும் கூட்டுறவு அதிகாரிகளும் இதைப்பற்றி கண்டும் காணாமல் அமைதி காக்கின்றனர். அதுதான் ஏன் என்று புரியவில்லை. சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தாலும் யாரும் நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை. காட்பாடி ராஜாஜி நகர் பகுதி மற்றும் கேஆர்எஸ் நகரில் உள்ள ரேஷன் கடைகள், பள்ளிக்குப்பம், வேலூர் கஸ்பா, வேலப்பாடி, சலவன்பேட்டை பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் முன்னணி வகிக்கின்றன. இங்கு ரேஷன் கடைகளில் இருந்து 50 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டை தலா ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை பட்டப்பகலில் வேன் கொண்டு வந்து கடத்தல்காரர்கள் பகிரங்கமாக கடத்திச் செல்கின்றனர். ஏதோ பெயரளவில் வழக்கு பதிவு செய்கின்றனர். ஆனால் குற்றவாளிகள் சிக்கியதாக இதுநாள் வரையில் எவ்வித தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கட்சிப் பாகுபாடு இல்லாமல் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் பெயரை பயன்படுத்தி அரிசி கடத்தலில் கொடிகட்டி பறக்கின்றனர்.

வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் கிடைக்கும் ரேஷன் அரிசி மூட்டைகள் ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுகின்றன. ரயில்களும் இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்று ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவது வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது. தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு தலைவராக உள்ள அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த திருட்டை தொடர்ந்து செய்வதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதில் முன்னாள் அமைச்சர், எம்எல்ஏக்கள் பெயர்கள் அடிபடுகின்றன. இதில் அதிக கமிஷன் கிடைப்பதால் தொடர்ந்து தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் காட்சிகள் மாறும் என்று எதிர்பார்த்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த போதும் அதைப்பற்றி சிறிதும் கவலை இல்லாமல் அரிசி கடத்தல் தொடர்கிறது. இதனால் குண்டர் தடுப்பு காவல் சட்டம் ஏதாவது நீக்கப்பட்டு விட்டதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. நேர்மை வழி நின்று ஆட்சி செய்யும் முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல் இது என்கின்றனர் வேலூர் மற்றும் காட்பாடி தொகுதி மக்கள். 

பட்டப்பகலில் இருசக்கர வாகனங்களில் அரிசி கடத்தப்படுகிறது. இதில் ஆண்களை காட்டிலும் பெண்கள்தான் தைரியமாக ஈடுபடுகின்றனர். ஆதலால் ஆணென்ன, பெண்ணென்ன என்று பேதம் பார்க்காமல் யாராக இருந்தாலும் அவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி கடத்தல் அண்டை மாநிலத்துக்கு செல்வதை அடியோடு தடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு அலுவலர்கள் மனது வைப்பார்களா? அரிசி கடத்தல் தடுக்கப்படுமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

No comments

Thank you for your comments