Breaking News

முத்தமிழறிஞர் கருணாநிதி படத்திறப்பை அதிமுக புறக்கணித்தது சரியல்ல- அமைச்சர் துரைமுருகன்

சென்னை:  

முறைப்படி அழைப்பு விடுத்தும் விழாவில்  அதிமுக பங்கேற்கவில்லை என்றும்,  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு விழா மேடையில் எங்களுடன் சரிசமமாக உட்கார்ந்து வாழ்த்துரை தெரிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.



தலைமை செயலகத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு விழா எதிர்க்கட்சிகள் தோழமைக் கட்சியினரின் பங்களிப்புடன் நடைபெற வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு குடியரசுத் தலைவர், ஆளுநர் அமர்ந்துள்ள வரிசையில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என்றும், விழாவில் வாழ்த்தி பேசுவதற்கு வாய்ப்பு தரப்படும் என்றும் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்படி நானும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தேன். நீங்கள் விழாவுக்கு வரவேண்டும் என்று முதலமைச்சர் விரும்புகிறார். விழா மேடையில் எங்களுடன் சரிசமமாக உட்கார்ந்து வாழ்த்துரை தெரிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தேன். 

அதற்கு அவர் நான் சேலத்துக்கு காரில் சென்று கொண்டிருக்கிறேன். ஊருக்கு சென்று இறங்கியதும், கலந்து பேசிவிட்டு சொல்வதாக கூறினார். ஆனால் அதன்பிறகு அவர் என்னிடம் எந்த பதிலும் சொல்லவில்லை. 

சட்டசபை செயலாளரை போனில் தொடர்பு கொண்டு நாங்கள் விழாவுக்கு வரவில்லை என்று கூறிவிட்டார். என்னிடம் சொன்னால் வற்புறுத்தி விழாவுக்கு அழைப்பேன் என்பதால் என்னுடன் அவர் பேசவில்லை.

நாங்கள் அவருக்கு உள் மனதோடு உரிய மரியாதை தரப்படும் என்று அழைத்து பார்த்தோம். ஆனால் இதற்கு முன்பு நடந்த ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு எங்களை அப்படி அழைக்கவில்லை. பத்தோடு பதினொன்றாக அழைப்பிதழ் அனுப்பி வைத்திருந்தனர்.

எனவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்வதுபோல் தி.மு.க. புறக்கணித்ததால் இப்போது நாங்கள் கலைஞர் படத்திறப்பை புறக்கணித்தோம் என்று கூறுவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


No comments

Thank you for your comments