காட்பாடி ரயில் நிலையத்தில் வெள்ளி கடத்தியவர் கைது! உட்பட செய்திகளின் தொகுப்பு
வேலூர்:
காட்பாடி ரயில் சந்திப்பு நிலையத்தில் வெள்ளி கட்டிகளை கடத்தி வந்த சேலத்தைச் சேர்ந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
காட்பாடி ரயில் சந்திப்பு நிலையத்தில் ரயில்வே போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து ஒடிஸா சென்ற விரைவு ரயிலில் சந்தேகப்படும் படி ஒரு நபர் அமர்ந்திருந்தார். அவர் போலீஸாரைப் பார்த்ததும் தப்பியோடினார்.
அவரை விரட்டிச் சென்று போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர் கொண்டு வந்த பெட்டியில் ரூ.11 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கட்டிகள் இருந்தன. அத்துடன் ரொக்கப் பணம் ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்து 200ம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அவரை ரயில்வே போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேலம் செவ்வாபேட்டை, பங்களா தெருவைச் சேர்ந்த ராஜகோபால் மகன் டி.ஆர்.ரவி(40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீஸார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் காவலில் அடைத்தனர்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில், வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் அறிவுறுத்தலின் பேரில் நேற்று காலை வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலத்துக்கு உட்பட்ட காகிதப்பட்டறை உழவர் சந்தையில் கைகழுவுதல் சம்பந்தமாக விழிப்புணர்வு வழங்கி வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் துண்டு பிரசுரங்களை இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் வழங்கினார்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
புதுச்சேரி தமிழ்ச்சங்க அரங்கத்தில் பாஜ காமராஜ் நகர் தொகுதி செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மாநிலத் தலைவர் சாமிநாதன், ஜான்குமார் எம்எல்ஏ, பாஜ பிரமுகர் காசிலிங்கம் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
இரட்டை தலையுடன்
பிறந்த கன்றுக்குட்டி!
கிருஷ்ணகிரி:
இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர் கிராம மக்கள். இதனால் இந்த கிராமமே பரபரப்பாக காணப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள புதூர் கிராமத்தில் இரண்டு தலைகளுடன் ஒட்டிய நிலையில் பிறந்த அதிசய பெண் கன்றுக்குட்டியை, கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள புதூர் புங்கனை ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் சதீஷ் (35) என்ற விவசாயி அவரது விவசாய தோட்ட இல்லத்தில் வசித்து வருகிறார். இவரது இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் பரம்பரையாக விவசாயம் செய்து வரும் இவர், இரண்டு கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்க்கும் மாடு ஒன்று தாய்மை அடைந்து பெண் கன்று ஒன்றை ஈன்றது. இரண்டு தலைகளுடன் ஒட்டிப்பிறந்த அந்த கன்றுக்குட்டிக்கு நான்கு கண்களும், இரண்டு வாய் மற்றும் இரண்டு மூக்கு என அதிசயமாக பிறந்துள்ளது. இந்த தகவல் காட்டுத்தீ போல் அருகில் இருக்கும் கிராமங்களில் பரவியது. இதையடுத்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அதிசய கன்றுக் குட்டியை பார்த்ததோடு செல்பி எடுத்துக் கொண்டு சென்ற வண்ணம் உள்ளனர்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
வியாபாரிகளுடன் உணவு பாதுகாப்பு
அலுவலர் உறுதி மொழி ஏற்பு!
காஞ்சிபுரம்:
கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்வது குறித்து, காஞ்சிபுரம் நகராட்சி அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து சிறு மற்றும் குறு வியாபாரிகளுடன் உறுதிமொழி ஏற்றனர்.
காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் நடந்த மூன்றாவது நாள் நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமை வகித்தார். காஞ்சிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் முருகன் முன்னிலை வகித்தார். தமிழகம் முழுவதும் கொரோனா மூன்றாவது அலையை எதிர் கொள்வது குறித்து, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஒரு வாரம் தொடர் நிகழ்ச்சி நடந்து வருகிறது. கொªரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடைபாதை வியாபாரிகள், உணவகத் தொழிலாளர்கள், பட்டுச் சேலை வியாபாரிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்றனர். இதற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் லெட்சுமி, நகர் நல அலுவலர் முத்து உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
பேத்தியை பலாத்காரம் செய்த தாத்தா
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே சொந்த தாத்தாவே பேத்தியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி கருக்கலைப்பில் ஈடுப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் பொன்னிக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதில் அவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், பொன்னி இறந்துவிட, ராஜா பிள்ளைகளை விட்டுவிட்டு, பெங்களூரில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், இவர்களது இரண்டு குழந்தையும் பொன்னியின் அப்பா மாயாண்டியின் வளர்ப்பில் இருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, மாயாண்டி தனது 15 வயது பேத்தியுடன் கடந்த 3 ஆண்டுகளாக தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், பேத்தியுடன் தாத்தா தகாத உறவில் இருந்ததின் காரணமாக சிறுமி கர்பாமாகி உள்ளார். இச்சம்பவத்தை மறைக்கும் விதமாக வீட்டை விட்டு தனது பேத்தியை வெளியில் அனுப்பாமல் பார்த்துக்கொண்ட முதியவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவரின் உதவியுடன் திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டி பகுதியில் வசிக்கும், ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணி என்பவரிடம் கர்ப்பிணியாக இருந்த பேத்திக்கு கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளார். இதில் அச்சிறுமிக்கு, இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை முதியவர் முனியாண்டி தென்பெண்ணையாற்றில் புதைத்துவிட இந்த தகவல் ஊர்முழுக்க கசிந்துள்ளது.
இதனையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் தாமாக முன்வந்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், முதியவர் முனியாண்டி மீதும் அவருக்கு உறுதுணையாக இருந்த அதே கிராமத்தை சேர்ந்த இந்திராணி என்பவர் மீதும், சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பு செய்த மனம்பூண்டி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணி உள்ளிட்ட மூவர் மீதும் போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
பூர்வீகச் சொத்தை தங்கள் பெயருக்கு பட்டா மாற்றித் தர ஆட்சியரிடம் மனு!
காஞ்சிபுரம்:
உங்களது பூர்வீகச் சொத்தை தங்கள் பெயருக்கு பட்டா மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு கொடுத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம் திருமங்கலம் கண்டிகையைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன், சீனிவாசன் உள்ளிட்ட ஏழு பேர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எங்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலம் திருப்பெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் உள்ளது.
இதன் சர்வே எண் 90/3 பட்டா எண் 426 ஆகும். இந்த நிலத்தில் மேற்கண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து 40 ஆண்டுகளாக பயிர் செய்து வருகின்றனர். கடந்த 1987ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் யூ.டி.ஆர்., எனப்படும் ஆவண காப்பகத்தில், சுப்பிரமணியன் வகையறா பெயரில் இருந்த யூ.டி.ஆர்., எண் தவறுதலாக வேறு ஒரு நபரின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை திருத்தம் செய்து கொடுக்க வேண்டும் என சுப்பிரமணியன் குடும்பத்தார் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே எங்கள் மனு மீது விசாரணை நடத்தி யூ.டி.ஆரில்., எங்கள் பெயருக்கு பட்டா மாற்றிக் கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் கொடுத்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளனர். ஆட்சியர் மனுவை பெற்றுக் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.







No comments
Thank you for your comments