Breaking News

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார்

சென்னை :

அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் (80) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


அதிமுக அவைத்தலைவராக உள்ள மூத்த தலைவர் மதுசூதனன். கடந்த சில ஆண்டுகளாகவே இவரது உடல்நிலையில் சில பிரச்சினைகள் இருந்தன.  கடந்த ஜூலை மாதம் மதுசூதனனுக்கு, திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினையை ஏற்பட்டது. 

இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை திடீரென மோசமானது, இதையடுத்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். 

அப்போது, சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனனை, மருத்துவமனைக்கே  சென்று சசிகலா நேரில் பார்த்துவிட்டு வந்தார். மேலும், மதுசூதனனின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.  

அதே நாளில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்தார்.

இந்நிலையில், தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக ஆபத்தான கட்டத்தில் இருந்து மெல்ல மெல்ல அவர் மீண்டார். இருந்த போதிலும் தொடர்ந்து மருத்துவமனையிலேயே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இச்சூழலில், அவரது உடல்நிலை மீண்டும்  கவலைக்கிடமான நிலைக்குச்  சென்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மதுசூதனன் இன்று காலமானார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர் மதுசூதனன்  என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்கு அதிமுக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மதுசூதனன் - அரசியல் பயணம்

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மதுசூதனன், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக 16 வயதில் ரசிகர் மன்றத்தை தொடங்கினார். 

எம்ஜிஆர் அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் அதிமுக தொண்டராக இருந்து அரசியலுக்கு வந்தவர். சென்னையின் செல்வாக்கு மிக்க நபராக இருந்தவர் மதுசூதனன்.

எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிலும் அவைத்தலைவராக இருந்தார். 

கடந்த 1991-96 வரையிலான முதல் ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையிலேயே கைத்தறித்துறை அமைச்சராக இருந்துள்ளார். 

மேலும், ஜெயலலிதா இவரை அதிமுக அவைத் தலைவராகவும் நியமித்து அழகு பார்த்தார்.  அவர் இருக்கும் வரை அவர்தான் என்றுமே  அவைத்தலைவர் என்று கூறினார் ஜெயலலிதா.  கடந்த 2007ம் ஆண்டு முதல் அதிமுகவின் அவைத் தலைவராக இருந்து வந்தார் மதுசூதனன்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2017ஆம் ஆண்டு ஒபிஎஸ், சசிகலா இடையே ஏற்பட்ட பிரச்சினையால் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். 

ஒ. பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய போது, அவருக்கு  ஆதரவாக மதுசூதனன் செயல்பட்டார்.  ஆதரவு அளித்த அதிமுக தலைவர்களில் முக்கியமானவர் மதுசூதனன்.

மீண்டும் கட்சி ஒன்றாக இணைந்த பின்னர் மீண்டும் அதிமுகவின் அவைத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.

No comments

Thank you for your comments