செய்தியாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனை கிடப்பில் போடப்பட்டுள்ள அவலம் தொடர்கிறது!
வேலூர், ஆக.20-
வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைகள் வழங்குவதாக ஆசைவார்த்தைகள் கூறி மாவட்ட நிர்வாகம் ஆண்டுகளை பல கடந்தும் திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள அவலம் தொடர்கதையாகி உள்ளது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனாவது இந்த திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவாரா? செய்தியாளர்களுக்கு மனைகள் வழங்குவாரா? என்று செய்தித்துறையினர் ஆவலோடு எதிர்ப்பார்க்கின்றனர்.
வேலூர் மாவட்டம் என்றாலே போலி செய்தியாளர்கள் அதிகம் உள்ள மாவட்டம் என்று தொன்று தொட்டு பெயர் பெற்றுள்ளது. இங்கு பணியாற்றும் பல செய்தியாளர்கள் வெளிவராத பத்திரிகைகள், ஒளிபரப்பப்படாத சேனல்களுக்கு தங்களை செய்தியாளர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர். அப்படி இருந்தாலும் அவர்களை வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் அவர்களை வெண்சாமரம் வீசி வரவேற்று வருகிறது. இதனால் உண்மையாக உழைக்கும் செய்தியாளர்கள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக வறுமைக் கோட்டுக்கு கீழ் பல செய்தியாளர்கள் இன்று குடும்பம் நடத்தி வருகின்றனர். பார்த்தாக்கா ஆளு ரொம்ப மிடுக்கு ஆனால் அவர்கள் உள்ளத்தில் பத்து கதை இருக்கு என்பர். இதே நிலைதான் வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் பல செய்தியாளர்களுக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நிலையில் முன்னாள் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களுக்கு விரைந்து மனைப்பட்டாக்களை வழங்க தன்னால் ஆன முயற்சிகளை எடுத்தார்.
முடியும் தருவாயில் சட்டமன்ற தேர்தல் நடப்பது குறித்து அறிவிப்பு வெளியானது. அத்துடன் அந்த பணி நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்ததும் மீண்டும் அந்த பணிகள் தொடங்கியது. இதற்கான பூர்வாங்க பணிகள் மெல்ல மெல்ல முடிந்து கொண்டு வந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்த சண்முகசுந்தரம் துரதிருஷ்டவசமாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அந்த பணி கிடப்பில் போடப்பட்டது.
வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய சு.மோகனும் கிருஷ்ணகிரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னையில் இருந்து வேலூருக்கு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சுப்பையா பணியமர்த்தப்பட்டார். அவரும் பொறுப்பேற்று கொண்டு பொறுப்புடன் பணியாற்றி வருகிறார். சிரித்து கொண்டே வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் இருக்கும் என்று அவர் இதற்கு முன்பு பணியாற்றிய மாவட்டங்களில் உள்ள செய்தியாளர்கள் தரப்பில் கதை கதையாக கூறப்படுகிறது. வேலூரில் அவரது பணி சிறக்க முதலில் காலச்சக்கரம் நாளிதழ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
இதற்கிடையே இந்த ஆண்டாவது நிலுவையில் உள்ள செய்தியாளர்களுக்கு சலுகை விலையில் மனை வழங்குவதாக கூறப்படும் திட்டம் செயல்படுத்தப்படுமா? என்பதுதான் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.
புதியதாக வந்துள்ள மாவட்ட ஆட்சியர் இதற்காக குழு ஒன்றை அமைத்துள்ளார். அந்த குழுவில் உள்ளவர்கள் ஏற்கனவே சலுகை விலையில் மனைப்பட்டாக்கள் வாங்கியவர்கள் என்பது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு தெரியுமா? தெரியாதா? என்பது அவருக்குதான் வெளிச்சம். இலவச மனைப்பட்டாக்கள் வழங்க வேண்டியதை சலுகை விலை மனைப்பட்டாக்கள் என்று பெயர் மாற்றி வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் அன்றாடங்காய்ச்சிகளாக உள்ள செய்தியாளர்கள் தலையில் ஒரு தொகையை செலுத்தச் சொல்லி மனைப்பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மற்ற மாவட்டங்களில் இலவச மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளோம். வேலூரில் அந்த திட்டத்தின் பெயரை சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்கும் திட்டம் என்று மாற்றம் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. எது எப்படி போனாலும் பணம் செலுத்தி வீட்டு மனை வாங்கும் சக்தி படைத்தவர்கள் 20 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்.
மற்றவர்கள் பணம் செலுத்தும் நிலையில் இல்லாதவர்கள் என்பதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு இதுவரை யாரும் கொண்டு செல்லவில்லை என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
தற்போது மாவட்ட ஆட்சியர் அமைத்துள்ள குழுவும் செயல்படாமல் அமைதிதான் காக்கிறது. இப்படியே அமைதி காத்தால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வந்து விடும். இந்தப் பணிகள் கிடப்பில் மீண்டும் போடப்படும். இதே நிலைதான் தொடர்கிறது. எந்த குழுவும் எந்த செய்தியாளர்களுக்கும் தேவையில்லை.
அந்த குழுவில் உள்ளவர்கள் ஏற்கனவே மனை வாங்கியவர்களாவார்கள். அவர்கள் இந்த பெயரை வைத்து கொண்டு மீண்டும் சலுகை விலையில் வீட்டு மனை பட்டா வாங்க முயற்சிகள் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சலுகை விலை மனைதானே, பணம் செலுத்தினால் யார் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம் என்ற முடிவில் பல செய்தியாளர்கள் மீண்டும் மனை வாங்கிட திட்டமிட்டுள்ளனர். இந்த எண்ணம் முறியடிக்கப்பட வேண்டும். வாங்கியவர்களே மீண்டும் மீண்டும் பட்டியலில் இடம் பெறுவது அடியோடு நிறுத்தப்பட வேண்டும். இதில் கவனமுடன் செயல்பட மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். மனை வாங்கிய பயனாளிகளின் பழைய பட்டியலை சரிபார்க்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் தலையாய கடமையாகும்.
எது எப்படியோ போகட்டும் விரைந்து பணிகளை முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே செய்தியாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனாவது இந்த பிரச்¬னையை முழுவீச்சில் விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments
Thank you for your comments