Breaking News

திவால் நிலையை நோக்கி பயணிக்கும் தமிழக கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள்!

 வேலூர் :

தமிழக அரசின் மவுனத்தால் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் 40 கிராமுக்கு மேல் நகைக்கடன் வைத்திருப்பவர்களும் தள்ளுபடி கிடைக்கும் என அசல், வட்டி கட்டாமல் உள்ளனர். வருவாய் இழப்பால் புதிதாக நகைக்கடன் வழங்க முடியாமல் கூட்டுறவு வங்கிகள் தடுமாறுகின்றன.

கடந்த எட்டு மாதங்களாக கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் ஸ்தம்பித்து போயுள்ளன. பெரும்பாலான சங்கங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் தருவதே பெரிய பிரச்னையாக உள்ளது. நகைகளுக்கு பொதுமக்கள் வட்டி கட்டவே இல்லை. அப்போதைய முதல்வர் பழனிசாமி ஆறு பவுன் நகைகள் வரை வட்டி தள்ளுபடி என்றார். இப்போது 5 பவுன் அதாவது 40 கிராம் அளவு, அதற்கு கீழே நகைக்கடன் வைத்து இருப்பவர்களுக்கு தள்ளுபடி என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நகைக்கடன் குறித்த ஏல நடவடிக்கை எடுக்கக்கூடாது என சங்கங்கள், வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 18 மாதங்களாக மக்கள் நகைகளை திருப்பவில்லை. அசல் மற்றும் வட்டியும் கட்டவில்லை. அவற்றை ஏலத்திற்கு விடமுடியாமல் சங்கங்கள், வங்கிகள் பரிதவிக்கின்றன.

ஒருபுறம் சங்கங்கள், வங்கிகள் பணப்பற்றாக்குறையால் பரிதவிக்கிறது என்றால் மற்றொரு பக்கம் சொற்ப நகைகளை அடகு வைக்க முடியாமல் தனியார் வட்டிக் கடைகளில் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்குகின்றனர் சாமானியர்கள். தேசிய வங்கிகளில் ஒரு பவுனுக்கு குறைவான நகைகளை அடகு வைப்பது சிரமம். சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் நகைக்கடன் தராததால் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர். வருமான வரி கட்டுபவர்கள், கார் வைத்திருப்பவர்கள், கூட்டுறவு ஊழியர்களுக்கு கடன் தள்ளுபடி இல்லை. ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றுள்ள விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என தற்போது அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே நபர் இரண்டு அல்லது மூன்று வங்கிகளில் கடன் வைத்திருந்தால் இரண்டு, மூன்று தள்ளுபடி சென்று விடும். அதையும் சரிபார்ப்பதற்காக நகைக்கடன் வாங்கியவர்களின் ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு வாங்கி இணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒருநபர் இரண்டு இடங்களில் கடன் வாங்கியிருந்தால் ஆதார் எண் மூலம் தெரிந்து விடும்.  இத்துடன் 40 கிராமிற்கு மேல் நகைக்கடன் வைத்திருப்பவர்களுக்கு தள்ளுபடி கிடையாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் 40 கிராமிற்கு மேல் நகைக்கடன் வைத்திருப்பவர்களும் அரசு தங்களுக்கு தள்ளுபடி வழங்கும் என அலட்சியமாக உள்ளனர். ஏற்கனவே அடகு வைத்த நகைகளை பணம் செலுத்தி மக்கள் மீட்கவும் தயாராக இல்லை. ஏற்கனவே நகைக்கடன் ஓராண்டு முடிந்த நிலையில் கூடுதலாக ஆறு மாதங்களாக நகைகளை திருப்பாமல் உள்ளனர். இதே போன்ற சூழ்நிலை கடந்த 2010ல் வந்து நிறைய வங்கிகள், சங்கங்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. அதுபோன்ற சூழ்நிலைக்கு மீண்டும் சங்கங்கள், வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் வாங்கி அந்த தொகை நகைக்கடனாக தரப்படுகிறது. அரசின் மவுனத்தால் நகைக்கடன் வட்டி கட்ட யாரும் தயாராக இல்லை. வருவாய் இல்லாததால் டெபாசிட்தாரர்களுக்கு முதிர்வுத் தொகை கொடுப்பதும் சிக்கலாக உள்ளது. எனவே அரசு நகைக்கடன் குறித்த தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன்மூலம் 40 கிராமுக்கு மேற்பட்ட நகைகளை வைத்திருப்பவர்கள் பணம் செலுத்தி நகைகளை மீட்க முன்வருவர்.

No comments

Thank you for your comments