சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: ஆளுநர், முதலமைச்சர் வரவேற்பு
சென்னை:
இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் அரசு பயணமாக சென்னை வந்தார்.
டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்த குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு தனித்தன்மையோடு செயல்பட்ட சட்டமன்றம் 12.1.1921 அன்று தொடங்கியது. அதை நினைவுப்படுத்தக்கூடிய வகையில், சட்டமன்ற நூற்றாண்டு விழாவை கொண்டாட தமிழக அரசு முடிவு செய்தது.
இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ம் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார். அப்போது, சட்டமன்ற நூற்றாண்டு விழாவை தலைமை தாங்கி நடத்தி தரவும், சட்டப்பேரவையில் மறைந்த முதலமைச்சர் கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
மதுரையில் கலைஞர் பெயரால் அமைய இருக்கக்கூடிய நூலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா, சென்னை கிண்டியில் அமைய இருக்கும் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா, சுதந்திரம் பெற்று 75 ஆண்டை குறிக்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் நினைவுத்தூண் அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தி வைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-க்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக இன்று சென்னைக்கு வந்துள்ளார்.
இன்று மாலை 5 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. அதில் மறைந்த முதலமைச்சர் கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இதையொட்டிச் சென்னைத் தலைமைச் செயலக நுழைவாயில் முழுவதும் வாழைகளால் தோரணம் கட்டி விழாக் கோலம் பூண்டுள்ளது.
தலைமைச் செயலக வளாகத்தில் ஐந்தடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 துணை ஆணையர்கள் தலைமையில் அதிவிரைவுப்படையினர், போக்குவரத்துக் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என ஐந்நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மோப்ப நாயின் உதவியுடன் தலைமைச் செயலகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. தலைமைச் செயலகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அடையாள அட்டை வைத்திருப்போர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
தலைமைச் செயலக ஊழியர்கள் பிற்பகல் ஒரு மணியுடன் வீடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 318 பேருக்கு மட்டுமே விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை வளாகத்துக்கு வருபவர்கள் சமூக இடைவெளியோடு அமர 10 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அமரச் சிறப்பு இருக்கைகள் ஒதுக்கப்பட்டு, எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவை வளாகத்திற்குள் மேஜைகள் எடுக்கப்பட்டு, புதிய ஷோபாக்கள் போடப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் வரும் வழி முழுவதும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வி.ஐ.பி வரும் போது வரவேற்புப் பதாகைகள் வைக்கப்படுவது வழக்கம். இந்த முறை பதாகைகள் வைக்கப்படவில்லை. சட்டப்பேரவை வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கைக்கு நேர் எதிரே கலைஞரின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்துக்குக் கீழ் "காலம் பொன் போன்றது.. கடமை கண் போன்றது" என்கிற சொற்றொடர் உள்ளது.


No comments
Thank you for your comments