Breaking News

பெண்கள் ஹாக்கி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ, ஆக.2-

பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் 22-வது நிமிடத்தில் கோல் அடிக்க ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 2-வது காலிறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

முதல் கால் பகுதி (15 நிமிடம்) ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அபாரமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி குர்ஜித் கவுர் கோல் அடித்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது.

3-வது மற்றும் 4-வது கால் பகுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். பல வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்தன. ஆனால் ஆஸ்திரேலிய வீராங்கனைகளால் அதை கோலாக மாற்ற முடியவில்லை.

இதனால் கடைசி இரண்டு கால் பகுதி ஆட்டங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆகவே இந்தியா 1-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

பிரதமர் மோடி வாழ்த்து:

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பி.வி.சிந்து தகுதியான பதக்கத்தை வென்றுள்ளது மட்டுமல்லாமல் ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணிகளின் வரலாற்று முயற்சிகளையும் பார்த்தோம். இது பாராட்டத்தக்கதாகும்.

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் வரலாற்றை எழுதுகிறீர்கள். நீங்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து ஒலிம்பிக் தங்கத்தை வெல்ல வாழ்த்துக்கள்.


No comments

Thank you for your comments