Breaking News

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் அரசியல் விளையாட்டு .... சிவ சேனா கடும் விமர்சனம்

புதுடெல்லி :

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயரை மத்திய அரசு மாற்றம் செய்துள்ளதை சிவ சேனா விமர்சனம் செய்துள்ளது.



விளையாட்டுத்துறையில் சாதிப்போருக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. இந்த விருதின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் இந்த விருது மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்றே அழைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘இந்திய குடிமக்கள் பலரும் என்னிடம் ஓர் கோரிக்கை முன்வைத்தனர். கேல் ரத்னா விருதை மேஜர் தயான் சந்த் பெயரில் வழங்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தைத் தெரிவித்தனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கேல் ரத்னா விருது இனி வருங்காலங்களில் மேஜர் தயான் சந்த் பெயரில் வழங்கப்படும். ஜெய்ஹிந்த்’’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பெயர் மாற்றம் அரசியல் விளையாட்டு என சிவ சேனா விமர்சனம் செய்துள்ளது. சிவ சேனா கட்சி பத்திரிகையான சாம்னா, எடிட்டோரியல் பக்கத்தில் ‘‘மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப கேல் ரத்னா விருது பெயர் மாற்றப்படவில்லை. ஆனால், அது அரசியல் விளையாட்டு.

உலகின் மிகப்பெரிய அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்திற்கு நரேந்திர மோடி எனப் பெயரிடப்பட்டுள்ளது. கிரிக்கெட்டிற்கான அவரது பங்களிப்பு என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.  மேலும், ‘‘முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பயங்கரவாத தாக்குதலால் உயிரிழந்தனர். அவர்களுடன் அரசியல் ரீதியில் வேறுபாடு இருந்திருக்கலாம். ஆனால், நாட்டிற்கான முன்னேற்றத்தில் அவர்களுடைய தியாகங்களை கேலி செய்ய முடியாது.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என்பதை மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என மாற்ற மக்கள் விரும்பவில்லை. ஆனால், இது அரசியல் விளையாட்டு. ராஜீவ் காந்தியின் தியாகத்தை இழிவு படுத்தாமல் மேயர் தயான் சந்த்-ஐ கவுரவப்படுத்தியிருக்கனும். ஆனால், நாடு சில பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை இழந்துள்ளது. இது சொர்க்கத்தில் தயான் சந்த்-ஐ கவலையடையச் செய்யும்.’’ எனக் குறிப்பிட்டுள்ளது.

No comments

Thank you for your comments