Breaking News

டிமிக்கி தரும் அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி....

புதுச்சேரி :

அரசு அலுவலகங்களில் மீண்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை நடைமுறைக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் 54 துறைகள் உள்ளன. இவற்றில் மாநில அரசு ஊழியர்கள் 27,836 பேர், உள்ளாட்சி அமைப்புகளில் 2,023 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மேலும், தன்னாட்சி நிறுவனங்களில் 6,093 பேர், மத்திய அரசு நிறுவனங்களில் 5,255 பேர் பணியாற்றி வருகின்றனர்.தற்போதைய நிலையில், ஒவ்வொரு அரசு துறையிலும் மூன்றில் ஒரு பங்கு ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. பணியில் உள்ள ஊழியர்கள், 2 பேர், 3 பேர் பார்க்க வேண்டிய வேலையை சேர்த்து பார்க்கின்றனர். இதனால் பணிச்சுமை அதிகரித்து, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.இந்த சூழ்நிலையில், அரசியல் பின்புலம் கொண்ட பல ஊழியர்கள், அலுவலக நேரத்தில், சட்டசபை வளாகத்தில் வலம் வரத் துவங்கி உள்ளனர்.தினசரி அலுவலகத்திற்கு செல்லும் இந்த ஊழியர்கள், வருகைப் பதி வேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, சட்டசபைக்கு சென்று விடுகின்றனர்.

அமைச்சர் அல்லது எம்.எல்.ஏ.க்கள் பின்னால் நாள் முழுவதும் சுற்றி வலம் வருகின்றனர். சிலர் வீட்டிற்கு சென்று, சொந்த வேலைகளை கவனிக்கின்றனர். ஏற்கனவே போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில், பணியில் உள்ள சில அரசு ஊழியர்களும், மருத்துவ விடுப்பு, தற்செயல் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்று விடுகின்றனர்.இதனால் சில அலுவலகங்களில் ஊழியர்கள் இன்றி, வெறிச்சோடி காணப்படுகிறது. மற்றொரு பிரிவு அரசு ஊழியர்கள் தினசரி வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என கிளம்பி விடுகின்றனர்.போராடுவது அவர்களின் உரிமை. பணி நேரத்தில் போராட்டத்திற்கு செல்லும்போது, விடுப்பு அல்லது 'பர்மிஷன்' எடுத்து செல்லலாம்.ஆனால், பல காரணங்கள் கூறி வெளியில் செல்லும் அரசு ஊழியர்கள் விடுமுறையோ, பர்மிஷன் எடுப்பது கிடையாது.

பணி நேரத்தில் 'டிமிக்கி' கொடுத்து விட்டு, வெளியில் உலா வருகின்றனர். ஊழியர்களை கண்காணிக்க வேண்டிய துறை அதிகாரிகளும், ஆட்சியாளர்களுக்கு பயந்து மவுனியாக உள்ளனர்.அரசு ஊழியர்கள் வருகையை கண்காணிக்க, ஒவ்வொரு அரசு துறை அலுவலகத்திலும் கடந்த சில ஆண்டிற்கு முன்பு, கைவிரல் ரேகையை பதிவு செய்யும் 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு இயந்திரம் அமைக்கப்பட்டது. 

இதன் மூலம், ஒட்டுமொத்த ஊழியர்களின் வருகையும், தலைமைச்செயலகம் மூலம் கண்காணிக்கப்பட்டது. இந்த பயோ மெட்ரிக் இயந்திரம், டிமிக்கி கொடுக்கும் அரசு ஊழியர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. பொருத்தப்பட்ட சில மாதங்களிலேயே, பயோமெட்ரிக் வருகைப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின. அதன்பின்பு, வழக்கம்போல் 'டிமிக்கி' ஊழியர்கள் கையெழுத்து போட்டு விட்டு, வெளியில் உலா வர துவங்கி விட்டனர்.அத்தியாவசிய பணிகள் நடைபெறும் வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி, பொதுப்பணி, சமூக நலம், குடிமைப்பொருள் வழங்கல் உள்ளிட்ட பல துறைகளில் பணி நேரத்தில் சில ஊழியர்கள் இருப்பதில்லை. அதனால், மக்கள் தங்களுக்கான சேவையை பெற முடியாமல், அலைக்கழிக்கப் படுகின்றனர்.

கொரோனா பரவலைக் காரணம் காட்டி, பயோமெட்ரிக் வருகைக்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், கண் கருவிழி பதிவு மூலம் வருகைப்பதிவு செய்யும் முறையை அமல்படுத்தலாம்.அலுவலக பணிக்காக வெளியில் செல்லும் ஊழியர்கள், வருகைப் பதிவேட்டில் காரணத்தை பதிவு செய்து, கருவிழி பதிவுசெய்து விட்டு வெளியில் செல்ல உத்தரவிட வேண்டும்.ஒட்டுமொத்த ஊழியர்கள் வருகையும், நேரடியாக தலைமைச்செயலகம் மூலம் கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


No comments

Thank you for your comments