Breaking News

தமிழக மாவட்ட பாஜக தலைவர்களுக்கு ஜாக் பாட்...

சென்னை: 

தமிழக சட்டசபைத் தேர்தலில் 4  தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக தமிழ்நாடு சட்டசபையில் நுழைந்தது. வெற்றிபெற்ற  அந்தந்த மாவட்ட தலைவர்களுக்கு பாஜக சார்பில் இன்னோவா கார் பரிசாக அளிக்கப்பட்டது.


தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுக, அதிமுக தவிர மக்கள் நீதி மய்யம், அமமுக நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் களம் இறங்கின.

இந்தத் தேர்தலில் 133 இடங்களில் வென்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மக்கள் நீதி மய்யம், அமமுக நாம் தமிழர் கட்சிகளால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. ஆளும் கட்சியாகத் தேர்தலை எதிர்கொண்ட அதிமுகவால் 66 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. 

இது கடந்த 2016இல் அக்கட்சி வென்ற இடங்களைக் காட்டிலும் 70 இடங்கள் குறைவாகும். அதேநேரம் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் களமிறங்கிய பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக தமிழ்நாடு சட்டசபையில் நுழைந்தது.


நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் எம்ஆர் காந்தி சுமார் 11,669 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் என்.சுரேஷ் ராஜனை தோற்கடித்தார். 

மொடக்குறிச்சி தொகுதியில் திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசனை 300க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சிஆர் சரஸ்வதி தோற்கடித்தார். 

கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை, பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தோற்கடித்தார். 

அதேபோல திருநெல்வேலி சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நயினார் நாகேந்திரன் வென்றார்.

இந்த நால்வரது வெற்றி தமிழக பாஜகவுக்கு புதியதொரு தெம்பையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. 

இதையடுத்து பாஜகவின் மாநில தலைவராக இருந்த எல் முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. முன்னதாக தேர்தல் சமயத்திலேயே பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக அளிக்கப்படும் என்று எல் முருகன் அறிவித்திருந்தார். அதாவது பாஜக வேட்பாளர்கள் எத்தனை தொகுதிகளில் வெல்கிறார்களோ, அந்தந்த மாவட்ட தலைவர்களுக்கு இன்னாவோ கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை ஆகிய மாவட்டங்களில் பாஜக வேட்பாளர்கள் வென்றிருந்த நிலையில், அந்தத்தந்த மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோயில், கோவை ஆகிய மாவட்ட பாஜக தலைவர்களுக்கு இன்னோவா காரை பரிசாக அளித்தார்.


No comments

Thank you for your comments