Breaking News

அதிமுகவை பழிவாங்குகிறதா பாஜக...? - அரசியல் வட்டாராத்தில் கிசுகிசுப்பு... பின்னணி என்ன...?

சென்னை: 

மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு டெல்லி பாஜக மேலிடம் ராஜ்யசபா சீட் கேட்டதை அதிமுக நிராகரித்ததால்தான் தற்போது ஒரு இடத்துக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதனால் ஒரு இடம் கூட அதிமுகிவிற்கு கிடைக்காது என்கின்றன பரபரக்கும் அரசியல் வட்டாரங்கள்.



தமிழகத்தில் ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான 3 இடங்கள் காலியாக இருக்கிறது. அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைந்ததால் காலியாக இருக்கும் ஒரு இடத்துக்கு மட்டும் அடுத்த மாதம் இடைத்தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

செப்டம்பர் 13ம் தேதி இந்த தேர்தல் நடக்கிறது. 3 இடங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தினால் எம்.எல்.ஏ.களின் எண்ணிக்கை வலிமை அடிப்படையில் திமுக 2 இடங்களையும், அதிமுக 1 இடத்தையும் கைப்பற்ற முடியும். அதே சமயம் தனித்தனியாக நடத்தினால் 3 இடங்களையும் திமுகவே கைப்பற்ற முடியும்.

இதனை உணர்ந்துதான், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் கோரிக்கை வைத்திருந்தார்கள். 


கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் அவரை எடப்பாடி பழனிசாமி, ஓபன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்தும், நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதித்தனர்.


மேலும், தமிழகத்தில் பாராளுமன்ற மேல்-சபைக்கான 3 இடங்களுக்கு தேர்தல் குறித்தும் பேசப்பட்டதாக தகவல் கசிந்தது. தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சராகி இருக்கும் எல்.முருகன் அடுத்த 6 மாதங்களுக்குள் எம்.பி.ஆக வேண்டும். இது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் ஜூலை 27ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போதும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்தும், நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதித்தாகவும், ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிகிறது.

அதிமுகவின் திட்டத்தை முறியடிக்க திமுக கோரிக்கை மனு

அதிமுகவின் திட்டத்தை முறியடிக்க, காலியாக உள்ள 3 இடங்களில் ஒரு இடம் கடந்த மார்ச் மாதமும், 2 இடங்கள் மே மாதத்திலும் காலியாக இருப்பதாக ஆணையத்தால் அறிவிக்கப்பட்டதால், ஒரு இடத்துக்கு தனியாகவும் மற்ற 2 இடங்களுக்கு தனியாகவும் காலியான காலத்தின் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று திமுக தரப்பில் எம்பிக்கள் டி.ஆர் பாலுவும் வழக்கறிஞர் வில்சனும் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். 

தனித்தனியாகத்தான் நடத்த வேண்டும் என முந்தைய காலக்கட்டங்களில் நடந்த பல்வேறு சம்பவ உதாரணங்களையும் தங்கள் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில், திமுகவின் கோரிக்கையை ஏற்று ஒரு இடத்துக்கு மட்டும் தனியாக தேர்தலை நடத்த அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். 

ராஜ்யசபாவில் பாஜக கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடையாது. அதனாலேயே பல சிரமங்களை சந்திக்கிறார் மோடி. இந்நிலையில், எதிர்க்கட்சியான திமுகவின் ராஜ்யசபா பலம் மேலும் வலிமையாக எப்படி அனுமதித்தது மத்திய அரசு என்ற கேள்விகள் அரசியலில் வட்டாரத்தில் எதிரொலித்தது. 

அரசியல் வட்டாரத்தில் இது குறித்து விசாரித்தபோது, ஒரே சமயத்தில் நடத்தினால் அதிமுகவுக்கு கிடைக்கும் ஒரு இடத்தை தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பாஜக எல். முருகனுக்காக கேட்டது பாஜக மேலிடம். ஆனால், அதற்கு எடப்பாடி ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் காட்டமான பாஜக, தனித்தனியாக தேர்தலை நடத்த ஆணையத்திற்கு மறைமுக உத்தரவை கொடுத்தது. அதன்படியே நடந்து கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம். 

பாஜகவுக்கு ஒரு இடத்தைத் தந்துவிட்டு அதன் நட்பை மேலும் இறுக்கமாக்கி கொண்டிருந்தால் தமிழகத்தில் அதிமுகவுக்கு ஏற்படும் நெருக்கடிகளை டெல்லியை வைத்து சமாளித்திருக்கலாம். இப்போது, அதிமுகவுக்கு அந்த ஒரு இடம் கிடைக்காமல் போகிறது என்று சொல்கிறார்கள் பாஜகவினர். 

தனக்கு கொடுக்கவில்லை என்றால் அது உங்களுக்கும் கிடையாது என்று சூசகமாக பாஜக பழிவாங்குகிறது என்று கிசுகிசுக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்..

ஊரு ரெண்டு பட்டால்.. கூத்தாடிக்கு கொண்டாட்டம்  என்பது போல் இது திமுகவுக்கு சாதமாக அமைந்துள்ளது. இதனால் திமுகவின் பலம் அதிகரிக்கும். மக்களவையில் திமுக பலமாக உள்ளது. அதே போல் ராஜ்யசபாவிலும் திமுக பலமாக இருக்கும்... இனி திமுகவுக்கு ஏறுமுகம்தான்....

இதனிடையே ஒரு இடத்துக்கு நடக்கும் ராஜ்யசபா இடைத்தேர்தலில் தேர்தலில் திமுக மட்டுமே ஜெயிக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது. இந்த ஒரு சீட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் யாருக்கு தருவார் என அறிவாலயத்தில் பட்டிமன்றமே நடந்தன. 


மாப்பிள்ளை சபரீசன், டெல்லியில் கட்டப்பாடும் திமுக தலைமை அலுவலக கட்டிட பணிகளை கவனித்து வரும் இளைஞர் கார்த்தி (உதயநிதியின் நண்பர் , அண்ணாநகர் எம்.எல்.ஏ. மோகனின் மகன்), தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் பெயர்கள் பரபரப்பாக அடிப்பட்டன. 

இந்த நிலையில், திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர் நல அணியின் செயலாளராக இருக்கும் புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லாவுக்கு வாய்ப்பளித்து  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். 

அப்துல்லாவும் உதயநிதியின் நண்பர்தான். திமுகவில் உதயநிதியின் எதிர்கால அரசியலுக்கு உதவுபவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது என்கிறார்கள் அறிவாலய தரப்பினர்.

அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைவால் காலியான ராஜ்யசபா இடத்துக்கு நடக்கும் இடைத்தேர்தலில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் அப்துல்லா, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார். 

முகமது ஜானின் பதவி காலம் 2025-ல் முடிவடையும் என்பதால், 6 ஆண்டுகால ராஜ்யசபா பதவி காலத்தில் அடுத்த நான்காண்டு காலம் (2025 வரை) மட்டுமே பதவியில் இருப்பார் அப்துல்லா. இதன் மூலம் ராஜ்யசபாவில் திமுகவின் பலம் 8 ஆக உயரும்.

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் வைத்தியலிங்கம் 2016லும் , கே.பி.முனுசாமி 2020-லும் ராஜ்யசபா எம்.பி.யானர்கள். அந்த வகையில் 2022 வரை வைத்தியலிங்கத்துக்கும், 2026 வரை கே.பி.முனுசாமிக்கும் பதவி காலம் இருந்தது. 

ஆனால், இவர்கள் இருவரும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றதால், இருவரும் தங்களின் ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்தனர். அந்த வகையில், நவம்பருக்குள் இருந்த 2 இடங்களுக்கான இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அந்த 2 இடத்திற்கான இடத்தேர்தலில் 2026 வரை பதவி காலம் இருக்கும் இடத்துக்கு சபரீசனையும், 2022 வரை மட்டுமே இருக்கும் இடத்துக்கு கார்த்திக்கும் வாய்ப்பளிக்க கட்சி தலைமையிடம் ஒரு யோசனை இருப்பதாகச் சொல்கிறார்கள். 

அதேசமயம், 2022-ல் அதிமுக எம்பி.க்கள் நவநீதகிருஷ்ணன், விஜயக்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகிய மூன்று பேரின் பதவி காலம் முடியவிருக்கிறது. வைத்தியலிங்கம் ராஜினாமா செய்ததால் நவம்பரில் நடக்கவிருக்கும் அந்த இடத்துக்கான இடைத்தேர்தலில் வெற்றிபெறும் திமுக உறுப்பினரின் பதவி காலமும் 2022-ல் முடிவடைந்து விடும். 

ஒருவேளை நவம்பரில் நடக்கும் இந்த இடத்துக்கான இடைத்தேர்தலில் உதயநிதியின் நண்பர் கார்த்திக் நிறுத்தப்பட்டால், அடுத்த 6 மாதத்திலேயே அவரது பதவி காலம் முடிந்து விடும். அதனால், 2022-ல் நடக்கும் 6 இடங்களுக்கான தேர்தலில் மீண்டும் கார்த்திக்கிற்கே வாய்ப்பளிக்கவும் இடமுண்டு. அதனால் முழுமையான பதவி காலம் இருக்கும் தேர்தலில் சபரீசனுக்கும் கார்த்திக்கும் வாய்ப்பளிக்கப்படலாம் என்று ராஜ்யசபா தேர்தல் குறித்து பல தகவல்கள் அறிவாலயத்தில் எதிரொலிக்கின்றன.  காலச்சக்கர சுழற்சியில் எதுவும் நடக்கலாம்.. எதுவும் மாறலாம்...  காலசக்கரமே அனைத்து உலகிற்கு உணர்த்தும்...


No comments

Thank you for your comments