Breaking News

ரெய்டை எதிர்கொள்ள ரெடியான அதிமுக.... "கழக சட்ட ஆலோசனை குழு" நியமனம்

சென்னை: 

அதிமுக மாஜி அமைச்சர்கள், நிர்வாகிகள் அடுத்தடுத்து ரெய்டுகளில் சிக்கி வருகின்றனர்.  இந்நிலையில், அதிமுக சார்பாக சட்ட ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதற்காக   உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், சி.வி சண்முகம் மற்றும் அதிமுக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம், அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியன், அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பத்துரை, அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் ஆகிய 6 பேர் சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 



அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தி.மு.க. சார்பில் அப்போதே பக்கம் பக்கமாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் ஆளுநரிடனம் அளிக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் முக்கிய திமுக நிர்வாகிகளுடன் நேரில் சென்று இதனை வழங்கினார்.  

திமுக தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உரிய விசாரணை நடத்தப்படும் என்று  தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 

ஆட்சி மாற்றத்துக்கு பிறகு போலீஸ் அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டனர். லஞ்ச ஒழிப்பு டி.ஜி.பி.யாக கந்தசாமி நியமிக்கப்பட்டார். பெண் போலீஸ் டி.ஐ.ஜி.களான பவானீஸ்வரி, லட்சுமி ஆகியோரும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் -  பிள்ளையார் சுழி

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  அலுவலகங்கள் உட்பட 21 இடங்களில்  சோதனை நடத்தப்பட்டது. 

அப்போது இதுபோன்று மேலும் பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி 

இந்நிலையில், ஆகஸ்ட் 10ம் தேதி  முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில்  லஞ்ச ஒழிப்புத்துறையால் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டை தொடர்ந்து எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இன்று எஸ்.பி வேலுமணியின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டது.

இந்நிலையில்,  கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கினர்.  மேலும் அவர்களுக்கு காலை, மதியம் என இரண்டு வேளை உணவும் இடையிடையே ரோஸ் மில்க், டீ உள்ளிட்டவற்றையும் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டது. எனவே இந்த ரெய்டு நடத்தப்போவதை முன்கூட்டியே தெரிந்துக் கொண்டு, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஆட்களை அழைத்து வந்ததுடன் அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இவர் மீதான விசாரணை தீவிரமாக நடந்து வருவதால் விரைவில் இவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவர் கைது செய்யப்படவும் கூட வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. 

முக்கியமாக முன்னாள் அமைச்சர்கள் பலர் இனி குறி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்தியதும் இது தொடர்பான விவாதங்களை மேலும் அதிகரித்துள்ளது.

அதிமுக தலைமை அவசர ஆலோசனை கூட்டம்

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக நடத்தப்படும் லஞ்ச ஒழிப்பு சோதனைகள் குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. 

தொடர் ரெய்டுகளுக்கு அதிமுக தரப்பில் எப்படி எதிர்வினையாற்றுவது, இது தொடர்பாக சட்ட ரீதியான போராட்டங்களை எப்படி எதிர்கொள்வது, ஆளும் கட்சியின் நடவடிக்கைகளை எப்படி சமாளிப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டாக தகவல் தெரிகின்றன....

முக்கியமாக ஆளும் தரப்பு போடும் வழக்குகளை எப்படி எதிர்கொள்வது, சட்ட ரீதியாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று ஆலோசனை நடைபெற்றது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

அதில், அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியின் தூண்டுதலால் பல்வேறு பொய் வழக்குகள் பதியப்பட்டும் வருகிறது. நாளுக்கு நாள் பொய் வழக்குகள் புனையப்படுவது அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

கழக பணியிலும், மக்கள் பணியிலும் பாடுபடும் நிர்வாகிகள் அனைவருக்கும் கட்சி எப்போதும் உடன் இருக்கும், அரணாக இருந்து பாதுகாக்கும் என்பதை கட்சி தலைமை தெரிவித்துக்கொள்கிறது. 

கழக சட்ட ஆலோசனை குழு  -  6 பேர்  நியமனம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால், திமுகவினரின் தூண்டுதலால், கழகத்தினர் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை, சட்டரீதியாக எதிர்கொள்ளும் வகையில் கழகத்தின் சார்பில் "கழக சட்ட ஆலோசனை குழு" கீழ்கண்டவாறு அமைக்கப்படுகிறது:

1. டி ஜெயக்குமார், பி.எஸ்.சி, பி.எல், கழக வழிகாட்டு குழு உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர், வடசென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்.

2. என் தளவாய்சுந்தரம் பி.எஸ்.சி, பி.எல், எம்.எல்.ஏ, அவர்கள். கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்.

3. சி.வி, சண்முகம், பி.ஏ, பி.எல் அவர்கள், கழக வழிகாட்டு குழு உறுப்பினர், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்.

4. பி.எஸ் மனோஜ் பாண்டியன், எம்.ஏ, எம்.எல்.ஏ அவர்கள். கழக வழிகாட்டு குழு உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர்,

5. ஐ.எஸ். இன்பதுரை, பி.ஏ, பி. எல் முன்னாற் எம்.எல்.ஏ அவர்கள், கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்.

6. ஆர்.எம். பாபு முருகவேல், பி.ஏ, பி.எல், முன்னாள் எம்.எல்.ஏ, அவர்கள், கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், கழக செய்தி தொடர்பாளர்.

ஆகிய 6 பேரும், நம் அரசியல் எதிரிகளால் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகளை பதிவு செய்யும்போது, அத்தகையவர்களுக்கு இந்த கழக சட்ட ஆலோசனைக்குழு, அந்த வழக்குகளுக்கான அனைத்து சட்ட உதவிகளையும் முழுமையாக செய்யும்.

எனவே கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட குழுவினரை தொடர்பு கொண்டு உரிய தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இனி வரும் வழக்குகளை எதிர்கொள்ளும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 6 பேருமே சட்டம் படித்தவர்கள். அதோடு அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்கள். 

அதிமுக எம்எல்ஏக்கள், மாஜி அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்படலாம், நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வரும் நிலையில் இந்த சட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக வழக்குகளை, நடவடிக்கைகளை எதிர்கொள்ள அதிமுக தயாராகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது. 

 

No comments

Thank you for your comments