Breaking News

அரசு கல்லூரிகளின் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் கிடைக்குமா...? கலக்கத்தில் பேராசிரியர்கள்...தடுமாறும் பல்கலைக்கழகங்கள்...

சென்னை:

41 அரசு கல்லூரிகளின் ஊதியச் செலவை பல்கலைக்கழகங்களின் தலையில் சுமத்தினால் அடுத்த சில ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களை தொடர்ந்து நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டு விடும். 

பல்கலைக்கழகத்தின் எதிர்காலம் கருதி அனைத்து ஊழியர்களின் ஊதியத்திற்கான செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கல்லூரிகளில் பணியாற்றுவோரின் ஊதியத்தை அந்தந்த பல்கலைக்கழகங்களே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவைக் கடுமையாக விமர்சித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஊதிய செலவைப் பல்கலைக்கழகங்களின் மீது சுமத்தினால், அவை வேகமாகத் திவாலாகிவிடக் கூடும் என விமர்சித்துள்ளார்.


இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தடுமாறும் பல்கலைகள்: அரசு கல்லூரிகளின்

ஊதியத்தை தமிழக அரசே வழங்க வேண்டும்!

பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கல்லூரிகளில் பணியாற்றுவோரின் ஊதியத்தை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களே வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணை பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. 

பல்கலைக்கழகங்களிடம் நிதி இல்லாத சூழலில், 41 அரசு கல்லூரிகளின் பணியாளர்களுக்கு இனி ஊதியம் கிடைக்குமா? என்ற ஐயம் எழுந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் ஊதியச் சுமையை ஏற்றுக் கொள்ள அவை தயாராக இல்லை. 

தமிழகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தான் அதிகபட்சமாக 10 உறுப்புக்கல்லூரிகளை நடத்தி வந்தது. அவை அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டு விட்ட நிலையில், இப்போது அக்கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டுமானால் மாதத்திற்கு ரூ.1.51 கோடி தேவைப்படும். 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ஆகஸ்ட் மாதத்திற்கு மட்டும் ரூ.8.93 கோடி தேவைப்படும். ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருப்பு உள்ள தொகை ரூ.6.52 கோடி மட்டும் தான். அதனால் 10 அரசு கல்லூரிகளின் பணியாளர்களுக்கு தங்களால் ஊதியம் வழங்க முடியாது என  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தமிழக அரசுக்கு அதிகாரப்பூர்வமாகவே கடிதம் எழுதிவிட்டார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் எடுத்துள்ள அதே நிலைப்பாட்டைத் தான் மற்ற பல்கலைக்கழகங்களும்  எடுத்துள்ளன. அவற்றின் நிலைப்பாடும் சரியானது தான். ஆனால், இந்த நிலைப்பாடு காரணமாக 41 அரசு கல்லூரிகளின் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் கிடைக்குமா? என்பது ஐயம் தான். தமிழகத்தில் செயல்பட்டு வந்த 41 உறுப்புக் கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை  2018-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டு, அந்த ஆண்டில் 14 கல்லூரிகளும், 2020-ஆம் ஆண்டின் இறுதியில் 27 கல்லூரிகளும்  அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டன. அவற்றுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் அரசு ஏற்றுக் கொண்டது. அதேபோல், ஊதியப் பொறுப்பையும் அரசு தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

41 அரசுக் கல்லூரிகளுக்கும் ஊதியம் வழங்குவதற்காக ஆண்டுக்கு ரூ.167 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்த தமிழக அரசு, கல்லூரிகளின் நிர்வாகப் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளும் வரை ஊதிய செலவை பல்கலைக்கழகங்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், அந்தத் தொகையை அரசு  திருப்பித் தரும் என்று அறிவித்தது. 

அந்த வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு ரூ.54.09 கோடி  உட்பட அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ரூ.200 கோடிக்கும் கூடுதலாக வழங்க வேண்டியுள்ளது. 

பல்கலைக்கழகங்களின் செலவுகளை சமாளிக்க அந்தத் தொகையை திருப்பித் தரும்படி  நிர்வாகங்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அதையும் வழங்காமல், ஊதியத்தையும் பல்கலைக்கழகங்களே தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டிருப்பது சரியல்ல. அச்சுமையை பல்கலைக்கழகங்களால் தாங்க முடியாது.

பல்கலைக்கழகங்களின் நோக்கம் கல்லூரிகளை நடத்துவது அல்ல.... ஆராய்ச்சிகளை மேற்கொள்வது ஆகும். கல்லூரிகளை நடத்துவது அரசின் பொறுப்பு ஆகும். ஆனால்,  ஊரகப்பகுதிகளில் உயர்கல்வி வழங்க புதிய கல்லூரிகளைத் தொடங்க வேண்டிய தேவை ஏற்பட்ட போதெல்லாம், அவற்றை அரசு தொடங்காமல், அந்தந்தப் பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மூலம் உறுப்புக் கல்லூரிகளாகத் தொடங்க ஊக்குவித்தது. இது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். 

பல்கலைக்கழகங்களின் நிதிநிலைமை சிறப்பாக இருந்தவரை இந்தக் கல்லூரிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில் பல்கலைக்கழகங்களின் நிதிநிலையை மோசமான நிலையில், உறுப்புக் கல்லூரிகளை அவற்றால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. அத்தகைய சூழலில் கல்லூரிகளை நடத்தும் பொறுப்பிலிருந்து பல்கலைக்கழகங்களை விடுவித்து விட்டு, அப்பொறுப்பையும், ஊதியச் செலவையும் அரசே ஏற்றுக் கொள்வது தான் முறையாகும். 

மாறாக, 41 அரசு கல்லூரிகளின் ஊதியச் செலவை பல்கலைக்கழகங்களின் தலையில் சுமத்தினால் அடுத்த சில ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களை தொடர்ந்து நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டு விடும். இப்போதே பல்கலைக்கழகங்கள் ஊதியம் வழங்க நிதியில்லாமல் வைப்பு நிதியில் உள்ள பணத்தை எடுத்து செலவழித்து வருகின்றன. நிதி நெருக்கடியால் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகள் நடைபெறுவதில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெரிய அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. சில பல்கலைகளில்  ஓய்வு பெறும் பேராசிரியர்களுக்கு ஓய்வுக்கால பயன்களை வழங்குவதற்குக் கூட நிதி இல்லை. இத்தகைய சூழலில் 41 அரசுக் கல்லூரிகளின் ஊதிய செலவையும் பல்கலைக்கழகங்களின் மீது சுமத்தினால், அவை எதிர்பார்த்ததை விட இன்னும் வேகமாக திவாலாகிவிடக் கூடும். அதற்கு அரசே காரணமாக இருக்கக்கூடாது.

எனவே, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு நிர்வாகத்திற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களின் ஊதியத்திற்கான செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, பல்கலைக்கழகங்களின் எதிர்காலம் கருதி அவற்றுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.200 கோடிக்கும் கூடுதலான நிலுவையையும் அரசு விரைந்து வழங்க வேண்டும்.

இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments