சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள ஸ்பெர்ம் திமிங்கல வாந்தி பறிமுதல் - 4 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர், ஆக.23-
ஸ்ரீபெரும்புதூர் அருகே வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள ஸ்பெர்ம் திமிங்கல வாந்தியை (அம்பெர்கிரிஸ்) பறிமுதல் செய்தனர் வனச்சரக காவலர்கள். மேலும், இது தொடர்பாக 4 பேரை கைது செய்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடல்வாழ் உயிரினமான திமிங்கலங்களில் சுமார் 20 வயதுக்கு மேல் உள்ள திமிங்கலங்கள் தங்களது உடலில் இருந்து உற்பத்தியாகும் மெழுகு போன்ற ஒரு விதமான வினோத பண்பைக் கொண்ட பொருளை வாய் வழியாக உமிழும் செய்வதை அம்பர் கிரீஸ் என கூறுவர். மேலும் கடலில் மிதக்கும் தன்மைக் கொண்ட இந்த அம்பர் கிரீஸ் பொருளானது துபாய் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகளில் உயர் ரக வாசனை நறுமணப் பொருட்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில் இந்த அம்பர் கிரீஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இந்த திமிங்கலத்தின் அம்பர் கீரிஸ் பொருளை கடத்திச் செல்பவர்கள் மீதும், விற்பனை செய்பவர்கள் மீதும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் வனத்துறை எல்லைக்குட்பட்ட மாங்காடு பகுதியில் இவ்வகையாக திமிங்கலத்தின் அம்பர் கீரிஸ்யை மர்ம நபர்கள் சிலர் சட்டத்திற்கு எதிராக பதுக்கி வைத்து வெளிமாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் கடத்தி வருவதாக, ஸ்ரீபெரும்புதூர் வனச்சரகத்தினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வனச்சரக அலுவலர் ராஜ்குமார் தலைமையில், வனச்சரக காவலர்கள் மாங்காடு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் திமிங்கலத்தின் அம்பர் கிரீஸ் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வனச்சரக காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் கடலூர் மற்றும் கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் பொழுது கிடைக்கும் திமிங்கலத்தின் அம்பர் கிரீஸ்யை மீனவர்களிடம் இருந்து வாங்கி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் அம்பர் கிரீஸ் மற்றும் ஒரு கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து அம்பர் கிரீஸை வெளிநாட்டிற்கு கடத்திச் செல்ல முயன்ற மதுரையைச் சேர்ந்த முருகன் (53), சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (30) ரஞ்சித் (36), விஜயபாஸ்கர் (56) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சுமார் 13 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் அம்பர் கிரீஸ்யினை வனத்துறையினர் பறிமுதல் செய்து அது தொடர்பாக 9 பேரை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments
Thank you for your comments