வரும் 26ம் தேதி.. அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுப்பு
புதுடெல்லி:
ஆப்கானிஸ்தானின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். அஷ்ரப் கனி ஆட்சி செய்தபோது அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா கட்டமைப்புகளை மேம்படுத்த உதவி செய்து வந்தது. இன்னும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தலிபான்கள் கையில் ஆப்கானிஸ்தான் சென்றதில் இருந்து இந்தியாவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தலிபான் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பயங்கரவாதத்தை எதிர்க்கும் இந்தியா இந்த விஷயத்தில் யோசித்து வருகிறது.
தலிபான்கள் அதிகாரத்தை பிடித்ததும் இந்தியா உடனான ஏற்றுமதி, இறக்குமதியை தடை செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் வெளியுறவுத்துறை மும்முரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பாராளுமன்ற கட்சிகளின் தலைவர்களிடம் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விவரிக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனடிப்படையில் வருகிற 26ம் தேதி காலை 11 மணிக்கு பாராளுமன்ற கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும். அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தானின் நிலவரம் மற்றும் ஆப்கானிஸ்தானின் முன்னேற்றம் குறித்து விளக்கம் அளிப்பார் என பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியை அங்கீகரிப்பதா? அல்லது புறக்கணிப்பதா? என்பது குறித்து ஒருமித்த முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
Floor Leaders of Political Parties would be briefed by EAM @DrSJaishankar on the present situation in Afghanistan, on 26th August, 11am in Main Committee Room, PHA, New Delhi. Invites are being sent through email. All concerned are requested to attend. https://t.co/iBX9NRd0qq
— Pralhad Joshi (@JoshiPralhad) August 23, 2021

No comments
Thank you for your comments