Breaking News

சென்னை ஐ.ஐ.டி.யில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஜாதிய பாகுபாடு - ஓபிசி ஆணையத்தில் புகார்

சென்னை: 

சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகத்தில் குறிப்பிட்ட ஜாதியினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பது நீண்டகால புகார். 

இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி.யில் (IIT-Madras) ஜாதிய பாகுபாடு கடைபிடிக்கப்படுவது தொடர்பாக விசாரிக்க கோரி டெல்லியில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் (OBC Commission) பேராசிரியர் விபின் புகார் அளித்துள்ளது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐ.ஐ.டியில் கல்வி கற்க வேண்டும்,  பணிபுரிய வேண்டும் என்பது பெரும்பாலனவர்களின் கனவு.   இதற்காக,  அவர்கள்  கடின உழைப்பு, பெரும் சவால்கள், போராட்டங்கள்  என  எதிர்கொண்டு கல்வி கற்று பணிக்காக  சென்னை ஐ.ஐ.டிக்குள் நுழைகின்றனர். 

ஆனால் சென்னை ஐ.ஐ.டி.க்குள் நுழைந்தால் நீங்கள், கேட்கபடும் முதல் கேள்வி.... என்ன ஜாதி? என்ற கேள்வியில் தொடங்கி அத்தனையும் ஜாதிய அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்ற அவல நிலைமையே.... 

ஜாதிய பாகுபாடு ஒடுக்குமுறையை நம்மில் எத்தனை பேர்தான் தாங்க முடியும்?.... ஒடுக்குமுறையின்  வெளிப்பாடே தற்கொலைகள்....  

பேராசிரியர் வசந்தா 25 ஆண்டுகளுக்கு முன்னரே போராட்டம்.... 

தமிழகத்தின் கணிதமேதை எனப் புகழப்படும் ஓய்வுபெற்ற பேராசிரியர் வசந்தா கந்தசாமி 25 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த ஜாதி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தார்.  இத்தகைய ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நீதிமன்றங்களை நாடியிருந்தார்.

பேராசிரியர் வசந்தா கந்தசாமியின் சமூக நீதிக்கான இந்த போராட்டத்தை அங்கீகரிக்கும் வகையில் 2006-ல் தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதை அப்போதைய முதல்வர் கருணாநிதி வழங்கினார். 

கடந்த 2015ல் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் மூலமாக மீண்டும் ஐ.ஐ.டி.யின் ஜாதிய ஆதிக்க கொடுமைகள் விவாதிக்கப்பட்டன. பல்வேறு படிப்பு வட்டங்கள் செயல்பட்டும் வரும் ஐ.ஐ,.டியில் அம்பேத்கர் பெரியார் பெயரிலான படிப்பு வட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இந்த சர்ச்சை வெடித்திருந்தது. மேலும் ஜாதிய, மதரீதியான ஒடுக்குமுறைகளால் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தற்கொலைகளும் அதிகரித்து வந்தன. 

மாணவி பாத்திமா தற்கொலை 

2019-ம் ஆண்டு ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் நாட்டையே உலுக்க்கியது. பாத்திமாவின் மரணத்துக்கு காரணமான ஆதிக்க ஜாதி பேராசிரியர் யார் என்பது வெளிப்படையாக தெரிந்தும் அவர் மீது நடவடிக்கைகள் பாயவில்லை. பாத்திமாவின் மரணத்துக்கும் நீதி கிடைக்காமல் போனது. 

அப்போது வெளியான ஒரு புள்ளி விவரம் 5 ஆண்டுகளில் 27 பேர் ஐ.ஐ.டியில் தற்கொலை செய்து கொண்டனர் என சுட்டிக்காட்டியது. 

உன்னிகிருஷ்ணன் நாயர் மரணம்

கடந்த மாதம் இதே ஐ.ஐ.டி.யில் ஆய்வுத் திட்ட உதவியாளராக பணியாற்றிய உன்னிகிருஷ்ணன் நாயர் உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது தந்தை இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்தார்.  மன அழுத்தத்தால் உன்னிகிருஷ்ணன் இறந்ததாக கூறப்பட்டது. 

பேராசிரியர் விபின் 

ஐஐடியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்த விபின், ஜாதிய ஒடுக்குமுறையால், பாகுபாட்டால் தாம் பணியில் இருந்து விலகுவதாக கடந்த ஜூலை 1ம் தேதி அறிவித்திருந்தார். 

பேராசிரியர் விபின் அறிவித்த மறுநாள் உன்னிகிருஷ்ணன் இறந்தது பெரும் சர்ச்சையானது. 

இதன்பின்னர் விபின், தமது பணி விலகல் கடிதத்தைத் திரும்பப் பெற்று மீண்டும் பணியில் சேர்ந்தார். 

போராட்டம் - தொடர்கதை

ஆனாலும் ஐ.ஐ.டியில் நிலவும் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பேராசிரியர் வசந்தா கந்தசாமியைப் போல நிர்வாகத்துக்குள் இருந்து கொண்டே போராடுவது என தீர்மானித்துள்ளார் பேராசிரியர் விபின். 

ஓபிசி ஆணையத்தில் புகார்....

இதன் முதல் கட்டமாக தற்போது ஓபிசி ஆணையத்திடம் ஐஐடியின் ஜாதிய பாகுபாடுகள் குறித்து விசாரிக்க கோரி கடிதம் அனுப்பி உள்ளார். 

சென்னை ஐ.ஐ.டியில் 2019-ம் ஆண்டு விபின் பணிக்கு சேர்ந்த போது அவரிடம் கேட்கப்பட முதல் கேள்வியே நீங்கள் எந்த ஜாதி என்பதுதானாம்.  பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்துவிட்டு ஐஐடியில் பணிக்கு சேர்ந்தாலும் ஜாதியைத்தான் கேட்கிறார்கள் என்பது எத்தகைய கொடூரத்தின் உச்சம்..  இந்த பேரவலத்துக்கு முடிவு கட்டும் போராட்டத்தைத்தான் இப்போது கையில் எடுத்திருக்கிறார் பேராசிரியர் விபின். 

இது தொடர்பாக  பேராசிரியர் விபின்  பேட்டி ஒன்றில் கூறியதாவது, 

நீங்கள் ஜாதியை பற்றி கவலைப்படாதவர்களாக இருக்கலாம். ஆனால் ஐஐடி நிர்வாகத்தில் இருப்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என நினைத்துவிடாதீர்கள். அவர்கள் உங்கள் ஜாதியை தெரிந்து கொள்ள விரும்புவார்கள் அல்லது எப்படியாவது தெரிந்து கொள்வார்கள் என கூறியிருந்தார். 

ஓபிசி ஆணையத்திடம் கடந்த 5ம்  தேதியன்று சென்னை ஐஐடி-ன் ஜாதிய ஒடுக்குமுறைகள், பாகுபாடு தொடர்பான விரிவான மனுவை கொடுத்திருக்கிறார் பேராசிரியர் விபின். தாம் எப்படியெல்லாம் ஜாதிய ரீதியாக ஒடுக்குமுறைக்குள்ளாகிறேன் என்பதை அதில் விவரித்துள்ளார் விபின். 

ஆகையால் சென்னை ஐ.ஐ.டி.-ன் ஜாதிய ஒடுக்குமுறைகள் குறித்து ஓபிசி ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றும் அதில் விபின் வலியுறுத்தி இருக்கிறார்.

No comments

Thank you for your comments